ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்கள் பாதிப்பு என்பதைத்தவிர ஒன்றுமில்லை : பசீர் சேகுதாவூத்

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலே முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒருவரியைத்தவிர முஸ்லிம்கள் பற்றி வேறெதுவுமே அந்த அறிக்கையில் கிடையாது என பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் பசீர்சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் வடக்கிலிருந்து பலவீனமான அடிப்படையில் 75000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வெறும் கால் நடையாக துரத்தியடிக்கப்பட்டது மனித உரிமை மீறலில்லையா? அதைப்பற்றிக் கணக்கெடுத்து பேசுவதற்கு இறுதியுத்தம் தடையாக இருக்க முடியுமா?

தமிழ் சமுதாயம் முள்ளிவாய்க்கால் வரைக்கும் பட்டதுன்பமும் வேதனையையும் நாங்கள் நன்கு அறிவோம். அதற்காக கண்ணீர் விட்டழுது தமிழ் சமுதாயத்திற்காகப் பேசத்தயாராக இருக்கின்றோம்.

அதேநேரம் முஸ்லிம்களுக்கேற்றபட்ட அநீதிகளுக்கான தீர்வையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பள்ளிவாயல்களில், வீதிகளில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள், சிறியவர்கள் ,பெரியவர்கள், குழந்தைகள் வயிற்றுக்குள் இருந்த சிசுக்கள் கீறிக்கிழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சமுதாயமாக முஸ்லிம் சமுதாயமும் உள்ளது.

கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுப் பறிக்கப்பட்டு அகதிகளாய் அனாதைகளாய் இருக்கின்ற சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்.

மட்டக்களப்பில் மாத்திரம் 37 முஸ்லிம் கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். மீண்டும் இன்று மீள்குடியேறிய போது அவர்களை விரட்டியடிக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

இதைப்பற்றி நாங்கள் தமிழ் சமுதாயத்திற்குள் பேசுகின்ற தமிழ்த் தலைமைகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முஸ்லிம்களுக்குள் தமிழர்களுக்கு ஏதாவது அநியாயம் இழைக்கப்படுகின்றபோது அதைத் தடுத்து நிறுத்துகின்ற கரங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம்.

இதைப்பற்றி முஸ்லிம்களின் இந்த நிலையைப்பற்றி யார் பேசுவது? ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டிலே முஸ்லிம்களுக்கு நடந்த இந்த அநீதிகள் பற்றிப் பேசுவதற்கு யாருமில்லை.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையோ முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளையோ முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதையோ, முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதையோ பற்றிப் பேசுவதற்கு ஜெனீவாவில் யாருமில்லை.

இந் நிலையில் தான் முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அநீதிகளும் முஸ்லிம்கள் வடக்கிலே இருந்து விரட்டியக்கப்பட்ட நிலையையும் மனித உரிமை ஜெனீவா மாநாட்டிலே எடுத்துச் சொல்லும் நிலைமை வரவேண்டும்.

முஸ்லிம்கள் இழந்த இந்த இழப்புக்களுக்கு நிவாரணம் என்பது முஸ்லிம்களின் அரசியல் உரிமையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கல்லையும் மண்ணையும் குவித்த அபிவிருத்திகளல்ல.

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமொன்றில் பேசியிருப்பதை ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்டேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரிதான் அல்லது சிங்கள தேசியக் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரிதான் எந்த ஒப்பந்தமுமில்லாமல் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவித உத்தரவாதங்களுமில்லாத வகையிலே நாங்கள் உங்களுக்கு பின்னால் வருவோமென்று எதிர்பார்க்க வேண்டாம்.

நாங்கள் வரத்தயாராக இருக்கின்றோம். யாரோடும் ஆட்சியமைக்கத் தயாராக இருக்கின்றோம். சில வேளைகளில் எதிர்க்கட்சியிலிருந்து ஆதரவளிக்கவும் தயாராக இருக்கின்றோம்.

இது பற்றி தேர்தல் முடிந்த பின்னரே நாங்கள் முடிவைச் சொல்லமுடியுமே தவிர இப்போது எந்த முடிவையும் எங்களால் சொல்லமுடியாது.

நான் என்றும் மதிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது இதுதான். நாங்கள் இரண்டு இனமும் ஒன்றாகப் பேசி பிரச்சினையை தீhத்;துக்கொள்ள விழைகின்றோம் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். எந்தவொரு தீர்வுத்திட்டமும் அரசாங்கத்திற்குக் கையளிக்கப்படும் போது சர்வதேச சமூகங்களின் மேசைகளில் போடுகின்றபோது இரண்டு கட்சிகளும் இரண்டு சமூகங்களின் தலைவர்களும் சேர்ந்த கலந்துரையாடலின் போது சேர்ந்து தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்திற்கூடாக மாத்திரம் தான் நாங்கள் பயணிக்கமுடியும் என்பதை நான் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வேட்பாளர் முபீன், மற்றும் கட்சியின் பிரதித் தலைவர் முழக்கம் மஜீட் உட்பட பலரும் உரையாற்றினர்.

– வீரகேசரி

Published by

Leave a comment