ரமழான் 27ம் இரவு: பல்லாயிரக்கணக்கான மக்கள் வணக்கங்களில் ஆர்வம்!

-MTM. ரஸ்லான்

(படங்கள்: காத்தான்குடி 05, ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்)

நேற்றிரவு (புதன்கிழமை) இலங்கையில் ரமலான் 27ம் இரவு வைபவங்கள் வழமைபோல் இடம்பெற்றிருந்தன.

காத்தான்குடியில் இம்முறை பெண்களுக்கான தொழுகைகள் அநேகமாக பள்ளிவாயல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதிகமான பெண்கள் ஆர்வமாக ரமலான் இரவு தொழுகைகளுக்காக பள்ளிவாயல்களில் நிறைந்திருந்ததை என்றுமில்லாதவாறு காணக்கூடியதாக இருந்தது. வர்த்தகர்களும் வியாபார நிலையங்களை நேரகாலத்துடன் மூடிவிட்டு பள்ளிவாயல்களில் தரித்திருந்ததையும் காணமுடிந்தன.

சென்றவருடம் நாட்டில் ஏற்பட்ட ‘கிறீஸ் மனிதன்’ பீதியாலும் பதட்டத்தாலும் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். இவர்களால் வருடத்தில் ஒருமுறைவரும் ரமழான் நல்லமல்களைக்கூட ஒழுங்காக செய்யமுடியாத  துர்ப்பாக்கிய நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதே போல் இன மோதல்களின் அச்சத்தாலும், பயங்கரவாத பிரச்சினைகளாலும் கடந்த காலங்களில் ரமலானில் ஓர் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது. மேலும் காத்தான்குடி உள்ளுர் மார்க்கப் பிரச்சினைகளும் ரமலான் மாதத்திலேயே இதற்கு முன்னர் இடம்பெற்றதாலும் ஓர் பதட்ட நிலைமை ரமலானில் தோன்றி இருந்தது.

ஆனால் மேற்படி எவ்வித அச்சமுமில்லாமல் என்றுமில்லாதவாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது பிரிவுக்குட்பட்ட பள்ளிகளிலும், மற்றும் அதிகாலை வரை தௌஹீத் பள்ளிகளிலும் செரிந்திருந்ததையும் காணமுடிந்தது.
ஓர் பெருநாளுக்கான ஒத்திகை போன்றே இன்று காத்தான்குடி நகரமும் மக்களின் ஆனந்தமும் வெளிப்பட்டிருந்தன.

முதன் முதலாக பெண்களுக்கான தறாவீஹ் தொழுகைகளை ஜாமியுழ்ழாபிரீன் நிர்வாகம் இவ்வருடம் ஏற்பாடு செய்திருந்தமை ஓர் விசேட அம்சமாகும். பெண்களும் தாய்மார்களும் இத்தொழுகைக்காகக் காட்டும் ஆர்வங்களை பார்க்கும்போது, இது இப்பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டுக்குக் கிடைத்த ஓர் நன்மையான வெற்றியாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!

Published by

Leave a comment