-MJ
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்பொழுது விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இவற்றுள் முதலாவது போட்டியில் தென்னாரிரிக்கா வெற்றியீட்டியிருந்ததும், இரண்டாவது போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஓர் ‘ஏசஸ்’ (Ashes) கிண்ணத் தொடரை விடவும் அதி முக்கியத்துவம் இன்று நடைபெறும் போட்டிக்கு இருக்கின்றது.
ஆம்! முதலாவது, சரித்திர புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி இடம்பெறுகின்றது.
இரண்டாவது, உலக டெஸ்ட் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் இங்கிலாந்தை பின் தள்ள தென்ஆபிரிக்கா துறத்திவருகின்றது. தொடர்ந்தும் முதலாம் இடத்தைத் தக்கவைக்கவேண்டுமானால் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இங்கிலாந்துக்கு இருக்கின்றது. இப்போட்டியில் தென்ஆபிரிக்கா வெற்றியீட்டினாலும் அல்லது வெற்றி தோல்வி இன்றி இப்போட்டி நிறைவடைந்தாலும் தென்னாபிரிக்கா டெஸ்ட் தர வரிசையில் முதலாமிடத்தை முடிசூடும்.
மூன்றாவது, இங்கிலாந்தின் நட்சத்திர வீரரும் உலகின் ஓர் சிறந்த கிரிக்கட் வீரருமான கெவின் பீட்டர்சனின் இறுப்போட்டியாக இப்போட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்காவது, இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிக்கான அணித்தலைவர் ‘அண்றூ ஸ்ட்ரோஸ்’ இன் 100வது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இதற்கிடையில் தற்பொழுது பீட்டர்சனுக்கும், இங்கிலாந்து கிரிக்கட் சபைக்குமிடையில் ஓர் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்தின் அணித்தலைவர் ஸ்ட்ரோஸ் மற்றும் அதன் பயிற்சியாளர் அண்டி புளோர் ஆகியோரை விமர்சித்து பீட்டர்சன் குறுந்தகவல்களை அனுப்பியதாகவும், டுவீட்டர் வளைத்தளத்தில் குறித்த போட்டி பற்றியும் குறிப்பிட்ட சில வீரர்கள் பற்றியும் விமர்சித்திருந்ததாகவும் இங்கிலாந்தின் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் தனது தவறுக் வருந்துவதாக பீட்டர்சன் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இதன்காரணமாக பீட்டர்சனின் இறுதிப் போட்டியாக இருக்கலாம் என கருதப்பட்ட இப்போட்டிக்கு, பீட்டர்சனின் பெயர் நீக்கப்பட்டிருக்கின்றது. எனினும் லோர்ட்ஸ் மைதானத்தில் பீட்டர்சனின் இறுதி ஆட்டத்தைக் காண்பதற்காக இங்கிலாந்து இரசிகர்கள் இரவுபகலாக காத்திருக்கின்றனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இருபது 20 (T20) உலகக் கிண்ணப் போட்டிக்கான இங்கிலாந்தின் அணிக்கு கெவின் பீட்டர்சனின் பெயர் ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே பல சுவாரஸ்யங்களின் முன்னிலையில் புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று இடம்பெறும் இப்போட்டி ஓர் கிரிக்கட் சமராகவே இருக்கப்போகின்றது. இப்போட்டியில் இங்கிலாந்து தோற்றால் தோல்வியைத்தாங்காத இங்கிலாந்தின் பத்திரிகைகள் மீண்டும் ஓர் ‘ஏசஸ்’ கிண்ணத்துக்கு வித்திடலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
![148676[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/1486761.jpg?w=257&h=300)
![Graeme-Smith-AFP-640x480[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/graeme-smith-afp-640x4801.jpg?w=300&h=225)
Leave a comment