அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் எதிர்ப்புப் பேரணி இனவாதத்தை தூண்டி கிழக்கு மாகாணத்தில் வாக்குப்பெறவரும் றவூப் ஹக்கீமை எதிர்த்து நடைபெற்ற தாகவும் இதில் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஈடுபடவில்லை எனவும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் நடந்த எதிர்ப்புப் பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று அக்கரைப்பற்று உதாஉல்லா அரங்கில் நடைபெற்றது. இதில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் உதாஉல்லா அங்கு கருத்துத் தெரிவிக்கையில்: அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல ஒரு நேர்மையான மூன்று சமூகங்களையும் அவரணைத்துச் செல்லக்கூடிய ஒரு நேர்மையான பொலிஸ் அதிகாரி. இவர் யாருக்கும் பக்கச் சார்பாகவோ, அநீதியாகவோ செயற்படாத ஒருவர். இவரை குறைகூறித் திரிவது தனது அரசியலுக்கு வங்குரோத்து நிலைமை ஏற்பட்டுள்ளதையே காண முடிகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் புலிகளுடனும், தமிழர் விடுதலைக் கூட்டணி, நோர்வே, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்குடன் இணைத்து மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.
இதற்கு எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் இம்மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நினைக்கின்றேன். அக்கரைப்பற்றில் நாங்கள் எவருக்கும் நோன்பு திறப்பதற்கு தடைகள் விதிக்கவில்லை. இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்தி திரிகின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம்.
முகமூடியணிந்த கறுப்புடை தரித்த முஸ்லிம் காங்கிரஸ் குண்டர்கள் சுமார் 35 பேருக்கு மேற்பட்டவர்கள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அன்றிரவு அக்கரைப்பற்றில் நடமாடியதைக் கண்டு மக்கள் அச்சப்பட்டு அதன் விளைவாகவே அடுத்த நாள் ஹக்கீமுக்கு எதிராக அக்கரைப்பற்று மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இங்கு எவ்விதமான தங்கு தடையின்றி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நோன்பு துறந்து விட்டுச் சென்றுள்ளார்கள். இது எங்களுடைய பெருந்தன்மையாகும். தேசிய காங்கிரஸ் இந்நாட்டில் வாழ்கின்ற மூவின சமூகங்களையும் அனுசரித்து செல்கின்ற ஒரு தேசியக் கட்சியாகும். அதன் பக்கம் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனது வாக்கு வங்கி குறைந்து காணப்படுவதால் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை குறை கூறுகின்ற அளவிற்கு அவருடைய தலைமைத்துவம் மாறியிருக்கின்றது. எந்த தயவும் இல்லாமல் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றும்.
சில குறிப்பிட்ட ஊடகங்கள் இனவாதத்தை தூண்டி மக்களை குழப்ப சிந்தனைக்கு உள்ளாக்கி வருகின்றன. மக்கள் தெளிவாக விளங்கி செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ. அகமட் ஸகி, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எல்.ஏ. அமீர், எம்.எஸ். உதுமாலெவ்வை, சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ் தர்களும் கலந்து கொண்டனர்.
-தினகரன்
Leave a comment