அவசர பொலிஸ் அழைப்புக்கு குறுந்தகவல் சேவை!

பொலிஸ் தலைமையகத்தில் 119 என்ற அவசர தொலைபேசி சேவைக்கு மேலதிகமாக எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் சேவையொன்றை பொலிஸ் தலைமையகம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் 146 வது வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த புதிய சேவையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ம் திகதி பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆரம்பித்து வைப்பாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

‘119’ என்ற அவசர தொலைபேசி அறிமுகம் செய்த பின்னர் ஒரே நேரத்தில் 20 அழைப்புகளை பெறக்கூடிய விதத்தில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இன்று ‘119’ என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தினசரி 6 ஆயிரத்து 500 தொலைபேசி அழைப்புகள் பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கின்றன. இவற்றில் 4300 அழைப்புகள் அநாமதேய அழைப்புகளாக பதிவாகியுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பொலிஸ் திணைக்களத்தின் 146 வது பொலிஸ் விழாவின் போது எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் அனுப்புவதற்கான புதிய தொலைபேசி இலக்கங்களும் பொலிஸ்மா அதிபரினால் வெளியிடப்படும்.

‘119’ என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது குறுந்தகவலூடாக அநாமதேய அழைப்புகள் தகவல்கள் தருபவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்- ஒரு நபர் தொடர்பாக தவறான ஆதாரமற்ற தகவல்களை வழங்கினாலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தின் ‘119’ அல்லது குறுந்தகவல் சேவைக்கு சரியான தகவல்களை ஆதாரங்களுடன் அனுப்பி வைக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment