கருமலை ஊற்று பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

கடந்த இரண்டு வருடங்களாக பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டிருந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலை ஊற்று பள்ளிவாசலை மீண்டும் திறக்க கிழக்கு மாகாண சபை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் குழுவின் தலைவரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் யாப்பா ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு எடுத்த நடவடிக்கைக்கு இணங்க இதற் கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒருவார காலத்துக்கு மார்க்க கடமைகளை மேற்கொள்ள இப்பள்ளிவாசலை கிராம மக்களுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு நஜீப் ஏ. மஜீத் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், திருமலை மாவட்ட கிழக்கு மாகாண சபை வேட்பாளர் ஆதம்பாவா தெளபீக், குருநாகல் மாவட்ட ஸ்ரீல. சு. கட்சி அமைப் பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார், மாத்தளை மாவட்ட மாநகர சபையின் தவிசாளர் ஹில்மி கரீம் ஆகியோர்களைக் கொண்ட குழுவினர் சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் கருமலை ஊற்று கிராமத்திற்கு சென்று 22 வது படையணியின் திருகோணமலை மாவட்ட பொறுப்பதிகாரி பிரிகேடியர் விஜயரத்னவின் அனுமதியுடன் பள்ளிவாசலை பார்வையிட்ட பின்னர், அக்குழுவினர் கிராம மக்களை சந்தித்து பள்ளிவாசல் சுத்தமாகவும் எதுவித பாதிப்பு இல்லாமலும் இருப்பதாக தெரிவித்ததோடு, பொறுமையுடன் மக்களை இருக்குமாறும் ஒரு கிழமைக்குள் பள்ளியை பெற்றுத்தருவதாக உறுதியளித்த தைத் தொடர்ந்து கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு குழுவினருக்கு நன்றி களையும் தெரிவித்தனர்.

இக் கிராமம் திருகோணமலை துறைமுக தென்முனை கடலோரத்தில் அமைந்துள்ளது.

200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நிலையில் இரண்டாம் மகா யுத்தத்தின் போது அங் கிருந்து இடம் பெயர்ந்து கிண்ணியாவில் வாழுந்து வந்த நிலையில் மீண்டும் அங்கு குடியேறி வாழ்ந்தனர். மீண்டும் வடக்கு, கிழக்கில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக பாதுகாப்பு நிமித்தம் இடம் பெயர நேரிட்டது. பின்னர் 2007 ம் ஆண்டு முன்னாள் அமைச்சரின் முயற்சி யால் அக்கிராம மக்கள் குடியமர்த்தப்பட்டு கருமலையூற்று பள்ளிவாசல் 10 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்டு அக் கிராம மக்களுக்கு மார்க்க கடமைகளை மேற்கொள்ள கையளிக்கப்பட்டது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010 ம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் 22 வது படையணி அப்பள்ளிவாசல் உட்படுத்தி முகாமை அமைத்ததால் பள்ளிவாசலுக்கு அக் கிராம மக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டிருந்தது.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment