நிறைவுபெறுகிறது ‘லண்டன் ஒலிம்பிக் 2012’

-MJ

கடந்த மாதம் (ஜூலை) 27ம் திகதியிலிருந்து பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இன்று 12-08-2012 ஞாயிறு மாலை நேரத்துடன் நிறைவு பெறுகின்றது.

இன்னும் 10 போட்டிகள் இன்று பிற்பகலிருந்து நடைபெற இருக்கின்றன. இவற்றுள் பிரதானமான மெய்வல்லுநர் போட்டிகளுள் ஒன்றான ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி லண்டன் வீதிகளில் இன்று காலை 11 மணி தொடக்கம் பிற்பகல் 13:40 வரை இடம்பெற இருக்கின்றன. 26.2 மைல்கள் கொண்ட இத்தூரத்தை ஓடி, வெற்றிபெரும் வீரர்களுக்கும், இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்காகவும் இன்று காலையிலிருந்து பெருந்திரளான மக்கள் குறித்த இடங்களில் நிலைகொண்டுள்ளனர்.

மரதன் ஓடும் வீதிகள் அனைத்தும் சுமார் 5 மணித்தியாலங்கள் மூடப்படும். பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரும், தொண்டர்களும், வீதிப் போக்குவரத்து பொலிசாரும், அவசர உதவிப்பிரிவினரும் இவ்வீதிகளில் தற்பொழுது நிலைகொண்டிருக்கின்றனர்.

உத்தியோகபூர்வமான இறுதிநிகழ்வு இன்றைய இனிமையான ஓர் மாலை நேரத்தில் லண்டன் ஒலிம்பிக் அரங்கில் 9 மணிக்கு இடம்பெறுகின்றது. பிரித்தானியர்களின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் இசைநிகழ்ச்சிகளும், கலாசார நிகழ்ச்சிகளும், வீரர்களின் அணிவரிசைகளும் மைதானத்தை அலங்கரிக்க இருக்கின்றன.

இவ் இறுதி நிகழ்வினை 4,100 ஒளிபரப்பு நிறுவனங்கள் நேரடியாக ஒளிபரப்புச் செய்கின்றன. முன்னர் 3100 ஒளிபரப்பு நிறுவனங்களே ஒளிபரப்புவதாக இருந்தது. எனினும் தற்பொழுது இவ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் இறுதி நிகழ்வில் 3500 தொண்டர்களும், 380 பாடசாலை சிறுவர்களும் கலை நிகழ்ச்சியை மேலும் அலங்கரிக்கவுள்ளனர்.

மூன்று கொடிகளைத்தாங்கிய வீரர்களின் அணிவரிசையுடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. ஒலிம்பிக் ஆரம்பித்த இடமான கிறீஸ் நாட்டின் கொடியும், தற்பொழுது ஒலிம்பிக் நடைபெறும் நாடான பிரித்தானியாவின் கொடியும், 2016ல் அடுத்த ஒலிம்பிக் இடம்பெறவுள்ள பிரேசில் நாட்டின் கொடியும் ஒலிம்பிக் அரங்கை கலக்க இருக்கின்றது.

இங்கிலாந்தின் பிரபல இயக்குநரரான ‘கிம் கெவின்’ என்பவரது இயக்கத்தில் இவ் இறுதி நிகழ்வுகள் இடம்பெற இருப்பதும் ஓர் சிறப்பம்சம். இவர் பிரித்தானியாவின் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக இயக்குவதிலும், ஸ்டூடியோ, மற்றும் நாடகத்துறையில் புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பிரதான இறுதி நிகழ்வுக்கு ஒலிம்பிக் அதிகாரிகளும், உறுப்பினர்களும், பிரித்தானிய அரசியல் உயர்பீட உறுப்பினர்களும், அரச குடும்பத்தினர்களும் மற்றும் உந்நாட்டு, வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

இலங்கை நேரப்படி அதிகாலை 01:30 இலிருந்து இந்நிகழ்ச்சியைப் பார்த்து இரசிக்முடியும். உலகில் உள்ள நூறு கோடிமக்கள் இவ் இறுதி நிகழ்வை நேரடியாகக் கண்டுமகிழ இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by

Leave a comment