கிழக்கில் இனவாத பிரசார நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ஹக்கீம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன அடிப்படையில் பிரசாரம் செய்து வாக்குகளை பெறக்கூடாது என்பதும் அபிவிருத்தியையும் கொள்கையையும் விளக்கியே வாக்குகளை பெறவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இனங்களை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை கக்கி அரசியல் செய்யக்கூடாது என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். மாறாக அபிவிருத்தி செயற்பாடுகள் மற் றும் கொள்கை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே மக்களிடம் வாக்குகளை கோர வேண்டும்.
எவ்வாறெனினும் சில கட்சிகள் கிழக்கில் இனவாதத்தை பரப்பி பிரசாரம் செய்வதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆனால் இது குற்றச்சாட்டு மாத்திரமே. ஊடகவியலாளர்களும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
எனக்கு உண்மையில் அது தொடர்பில் தெரியாது. தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக அரசியல் கட்சி மட்டத் தில் தீர்மானம் எடுப்போம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-தினகரன்
Leave a comment