இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்ற ஷுஹதாக்கள் தினம் மற்றும் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம், கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.
இந்த நிகழ்வுகளுக்கும் இறுதியாக ஊடகவியலாளர் மாநாட்டுக்கும் மாவட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அழைப்பின்படி ஊடகவியலாளர் மாநாடு இரவு எட்டு மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள் வருகை தந்து ஊடகவியலாளர் மாநாட்டுக்காக காத்திருந்த போதும் எதுவித அறிவித்தலுமின்றி அமைச்சர் ஹக்கீம் உட்பட அதிதிகள் அனைவரும் இரவு எட்டரை மணியளவில் வெளியேறிச் சென்றனர்.
இவ்வேளையில் செய்தியாளர்கள் தாம் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பது பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் தெரியப்படுத்தியபோது தனக்கு ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்திருப்பது பற்றி எதுவும் தெரியாது என்று அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச ஊடகவியலாளர்கள் யாரும் இங்கு உள்ளனரா என்றும் அமைச்சர் ஹக்கீம் ஊடகவியலாளர்களிடம் கேட்டார்.
தங்களை ஊடகவியலாளர்கள் மாநாட்டுக்கு அழைத்து விட்டு இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் ஊடகவியலாளர்களைக் கணக்கெடுக்காதவிதத்தில் நடந்து கொண்டமை தங்களை அவமானப்படுத்திய செயலாக தாங்கள் கருதுவதாக ஊடகவியலாளர்கள் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் நேரடியாகக் கண்டனம் தெரிவித்தனர்.
-Tamilmirror
Leave a comment