லண்டன் ஒலிம்பிக் 2012: அமெரிக்கா முதலாமிடத்தில்: நிறைவடைய ஒருநாளே இருக்கும் நிலையில் இலங்கை வீரர்கள் எங்கே?

-MJ

பல சாதனைகளுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும் லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் இன்று இரவுடன் (சனிக்கிழமை) முடிவுக்கு வருகின்றன. எனினும் உத்தியோகபூர்வமான நிறைவு நிகழ்ச்சிகள் (Closing Ceremony) நாளை ஞாயிறு மாலை லண்டன் நேரப்படி 9 மணிக்கு லண்டன் ஒலிம்பிக் அரங்கில் 80,000 இரசிகர்கள் முன்னிலையில் இடம்பெற இருக்கின்றது.

Rank Country Gold Silver Bronze Total
1 United States 41 26 27 94
2 China 37 25 19 81
3 Great Britain & N. Ireland 25 15 17 57
4 Russian Federation 15 21 27 63
5 South Korea 13 7 7 27
6 Germany 10 18 14 42
7 France 9 9 12 30
8 Hungary 8 4 3 15
9 Australia 7 14 10 31
10 Italy 7 6 8 21

ஆரம்ப நிகழ்வைப்போன்றே 3000 ஒளிபரப்பு நிறுவனங்கள் இறுதி நிகழ்வை ஒளிபரப்புச் செய்ய இருக்கின்றன. உலகில் உள்ள நூறு கோடி மக்கள் இந்நிகழ்ச்சியை நேரடியாகக் காணவிருக்கின்றனர்.

ஆரம்ப நிகழ்வைப்போன்று பல சாகசங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் பிரித்தாணியா, ஒலிம்பிக் வீரர்களுக்கும் உலக இரசிகர்களுக்கும் பிரித்தாணியா இரவு விருந்தாக வழங்க இருக்கின்றது. ஆரம்ப நிகழ்ச்சிகள் போன்றே இறுதி நிகழ்ச்சிகளும் இரகசியமாக காக்கப்பட்டு வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த போட்டிகளின்படி அமெரிக்கா 41 தங்கங்களுடன் மொத்தமாக 94 பதக்கங்களுடன் 1வது இடத்தில் இருக்கின்றது. இரண்டாம் இடத்தில் சீனா 37 தங்கங்களை வென்று மொத்தமாக 81 பதக்கங்களுடனும், பிரித்தாணியா 25 தங்கங்களுடன் மொத்தமாக 57 பதக்கங்களுடன் 3வது இடத்தையும் பெற்றிருக்கின்றது.

நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல் மெய்வல்லுநர் போட்டிகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. உள்ளக விளையாட்டுக்களில் சீனாவுக்கு நிகர் சீனாதான். எனினும் இறுதியாக இடம்பெற்ற இரு நாட்கள் இடம்பெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் அமெரிக்கா 6 தங்கம் வென்று இவ்வெற்றியினை தனதாக்கிக் கொண்டுள்ளது.

மெய்வல்லுநர் போட்டிகளில் மாத்திரம் அமெரிக்கா இதுவரையில் 8 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்களத்துடன் மொத்தமாக 26 பதக்கங்களை பெற்றிருப்பது ஓர் விசேட அம்சமாகும். இன்றும் முக்கிய இறுதிப் போட்டிகள் விமர்சையாக இடம்பெற இருக்கின்றன.

இதற்கிடையில் இலங்கையில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு சென்றவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது பற்றி சந்தேகிக்க வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலையில் இலங்கை மக்கள் ஏமாந்து போயிருக்கின்றனர். இதுவரையில் ஓர் முதற்தர போட்டிக்குகூட  இலங்கை வீரர்கள் இடம்பெற்றார்களா என்பதை தேடவேண்டி இருக்கின்றது.

ஒருவேளை உணவுக்காகக் கஷ்டப்படும் ஆபிரிக்க வறுமை நாடுகளான  எதியோப்பியா, கென்யா, ரினிடாட் போன்ற நாடுகள் ஒரு வெண்கலத்தைப் பெற்றாவது தங்களது நாட்டுக்கு பெருமைசேர்த்திருக்கின்றது. மற்றுமொரு வறுமைநாடான ஜமைக்கா 3 தங்கம் பெற்று மொத்தமாக 10 பதக்கங்களுடன் 17வது இடத்தில் இருக்கின்றது. இதே போல் ஆப்கானிஸ்தான்கூட ஒரு வென்களப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்திருக்கின்றது.

கிரிக்கட் போட்டிகளால் மாத்திரம் ஓர் சிறந்த வீரனை உருவாக்க முடியாது. வீரன் என்பது உண்மையில் உடல் பலத்தால் நிரூபிக்கக் கூடியவனுக்கே உரிய வார்த்தை இது. மெய்வல்லுநர் போட்டிகள் இதற்கு சான்றாகும். இலங்கை அரசாங்கம் மென்மேலும் மெய்வல்லுநர் வீரர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி, அவர்களது வெற்றிக்கு வழிசமைக்கவேண்டும். கிரிக்கட் போட்டிகளால் மாத்திரம் உலகை வெல்ல முடியாது. ஒலிம்பிக் இல் ஓர் வெண்களத்தையாவது வென்று ஒலிம்பிக் அரங்கில் இலங்கைக் கொடி பறக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை மக்களது விருப்பமாகும். அவை உலக மக்களால் ஆரத்தழுவ வேண்டும்.

லண்டன் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் இலங்கை அணிவகுத்து வரும்போது நாம் பார்த்திருந்த அதே வீரர்களை, இறுதி நிகழ்விலும் காணும் பாக்கியசாலிகளாகவே நாங்கள் இருக்கப்போகின்றோம். இலங்கை மக்களின் கனவுகள் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன.

உலக வல்லரசுக்கு சவாலாக வளர்ந்தவரும் இந்தியாவை பாராட்ட வேண்டும். ஒரு வெள்ளி 3 வெண்களத்துடன் மொத்தமாக 4 பதக்கங்களுடன் 52வது இடத்தில் இந்தியா இருக்கின்றது. எனினும் இந்தியர்கள் கிரிக்கட்டில் காட்டும் ஆர்வம் மெய்வல்லுநர் போட்டிகளிலும் காண்பித்தால் இந்தியாவின் ஒலிம்பிக் சரித்திரமும் மாறும். எனினும் ஏனைய விளையாட்டுகளுக்கு கிரிக்கட் ஓர் தடைக்கல்லாகவே இந்நாட்டிற்கும் இருந்து வருகின்றது.

இதேபோல் கிரிக்கட்டை மாத்திரம் நம்பி இருக்கும் பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் இலங்கைபோன்றே பட்டியலில் தேடவேண்டி இருக்கின்றது. இவர்கள்கூட எந்த ஒரு பதக்கங்களையும் இதுவரை பெறவில்லை!

அரபு நாடுகளான கட்டார் 2 வெண்களத்துடன் 70வது இடத்திலும், சவுதி அரேபியா மற்றும் குவைத் தலா 1 வெண்களத்துடன் 75வது இடத்திலும் இருக்கின்றது. எனினும் ஒரு பதக்கத்துடனாவது கௌரவமாக நாடு திரும்பும் பாக்கியசாலிகளாக இவர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை விளையாட்டு அமைச்சு என்ன செய்யப்போகின்றது என்பதற்கிடையில், இலங்கை விளையாட்டு இரசிகர்களின் இன்றைய எதிர்பார்ப்பாக இருப்பது 2 விடயங்கள். முதலாவது இலங்கையின் ‘சிறிலங்கா பிரிமியர் லீக்! மற்றையது இருபது 20 உலகக் கிண்ணம்!!!

Published by

Leave a comment