(உ/த) பரீட்சை: இணைந்த கணித வினாத்தாள்கள் சர்ச்சை
உயிரியல் வினா பத்திரத்தில் பிழைகள் இல்லை
-தினகரன்
க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் இணைந்த கணிதம் வினாத்தாள் யி இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த 15 வது வினாவிற்கு விடையளிக்க முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான முழுமையான புள்ளிகளை (1 1/2) வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஸ்பகுமார தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சுமத்தியிருப்பது போல் உயிரியல் பாட வினாத்தாளில் பாடத் திட்டத்திற்கு மேலதிகமாக எதுவும் வினாவாக்கப்பட வில்லையெனவும் குற்றச்சாட்டை தான் முழுமையாக மறுப்பதாகவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
இணைந்த கணிதம் வினாத்தாள் B இல் 15 வது கேள்வியில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து விளக்கம் கோரி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வினாத்தாளிற்கு பொறுப்பான பேராசிரியரிடம் பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக் கொண்டிருந்தார். பேராசிரியர் அறிக்கையில் அளித்த விளக்கம் அடிப்படையில் வினாவில் பிழையிருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பரீட்சைகள் ஆணையாளர் வினாத்தாள் திருத்தும்போது அவ்வினாவிற்கு பதிலளிக்க முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான புள்ளிகளை வழங்க தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, உயிரியல் பாடத் திட்டத்திற்கமைய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உயிரியல் பெயர்களை மாணவர்கள் மனனஞ் செய்யத் தேவையில்லாத போதும் நான்கு விடைகளில் சரியானதை தெரிவு செய்யும்படியே உயிரியல் வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. எனவே உயிரியல் வினாக்கள் தொடர்பில் எவ்வித திருத்தங்களும் செய்யப்படத் தேவையில்லை யென்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
Leave a comment