சற்று முன்னர் இடம்பெற்று முடிந்த மெய்வல்லுநர் போட்டியின் 200 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீரர்கள் 3 பதக்கங்களையும் பெற்று சரித்திரம் படைத்திருக்கின்றனர்.
லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் சூழ்ந்திருந்த 80,000 இரசிகர்களினரது ஒட்டு மொத்த ஆரவுடன் தனது 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் உசைன் போல்ட் 19.32 செக்கன்களில் ஓடி முடித்து, இந்த ஒலிம்பிக் போட்டியின் 2வது தங்கப்பதக்கத்தையும் முடிசூடிக் கொண்டதுடன் முன்னாள் அமெரிக்க வீரர் மைக்கல் ஜொன்ஸனின் சாதனையையும் சமப்படுத்தி இருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து மற்றுமொரு ஜமைக்கா வீரரான யோகான் பிளேக் இரண்டாம் இடத்தை அடைந்து வெள்ளிப்பதக்கத்தையும், ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த வாரன் வெய்ர் எனும் மற்றுமொரு வீரர் வெண்களப்பதக்கத்தையும் பெற்று தனது நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர்.
உசைன் போல்ட் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிவேகமாக ஓடி சாதனை படைத்திருந்தது 2009ல் ஆகும். இப்போட்டியில் இவர் 19.19 செக்கன்களில் ஓடி சரித்திரம் படைத்திருந்தார். எனினும் இம்முறை வேகத்தை உடைக்காவிட்டாலும் ஓட்டத்தில் 100 மீற்றரிலும், 200 மீற்றரிலும் தங்கம் வென்று ஒரு ஒலிம்பிக் சாதனையை படைத்திருக்கின்றார். யொகான் பிளேக் 2009ல் 19.26 செக்கன்களிலும், உசைன் போல்ட் 2008ல் 19.30 செக்கன்களிலும், மைக்கல் ஜொன்ஸன் (அமெரிக்கா) 1996ல் 19.32 செக்கன்களிலும், உசைன் போல்ட் 2011ல் 19.40 செக்கள்களிலும் ஓடி, வெற்றிபெற்று சாதனைபடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தவகையில் ஜமைக்கா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்பவற்றுடன் 9 பதக்கங்களுடன் 17வது இடத்தில் இருப்பதும் ஓர் விசேட அம்சமாகும்.
இதற்கிடையில் பல உலக நிறுவனங்கள் உசைன் போல்ட்டை தனது விளம்பரங்களுக்காக ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இங்கிலாந்து பெண் இரசிகைகளின் கனவு நாயகனாகவும் இவர் தற்பொழுது இருந்து வருவதாகவும் அங்குள்ள பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment