இலங்கை வரலாற்றில் மகாபோதி சங்கத்தில் முதன் முறையாக நோன்பு துறக்கும் “இப்தார்” நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை நடைபெற்றது.
பெளத்த – முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த “இப்தார்” நிகழ்வில் பெளத்த பிக்குமார் அநேகரும் முஸ்லிம்கள் உட்பட இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய நல்லிணக்க புரிந்துணர்வு மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மகாபோதி மண்டபத்தில் “மஃரிபு” தொழுகைக்கான “அதானை” மெளலவி எஸ். எஸ். எம். முஸ்தபா (பலாஹி) கூறினார்.
தேசிய நல் இணக்க புரிந்துணர்வு மன்றத்தின் இணைத் தலைவர்களான முன்னாள் சபாநாயகரும், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத் தலைவருமான எம். எச். முஹம்மத், வண. பேராசிரியர் கம்புறுகமுவே வஜிரநாயக்க தேரர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆரம்ப உரையை நிகழ்த்திய வண. மொனராகலை பஞ்ஞாலங்கார தேரர், எமது சமூகமும், முஸ்லிம் சமூகமும் வரலாற்றுக் காலம் முதல் நட்புறவுடன் வாழ்ந்த சமூகங்களாகும்.
வீணான சந்தேகமும், தவறான அணுகுமுறைகளும் தான் சமூக நல்லெண்ணத்தைக் கெடுக்கின்றன. நாம் நெருங்கிப் பழகியவர்கள். தொடர்ந்தும் நெருங்கி உறவாடி எமது சகோதரத்துவ ஒற்றுமையை வெளிப்ப டுத்துவோம் என்றார்.
கலாநிதி எம். எச். முஹம்மத், பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர நாயக்க தேரர் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்ஸன் சமரசிங்க பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
சிறப்புரைகளை சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளர்களான ஹஸன் மெளலானா, பிதா வண. சரத் ஹெட்டி ஆராச்சி, சிவஸ்ரீ சுப்பிரமணியக் குருக்கள், மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச ஆகியோர் நிகழ்த்தினர்.
பாராளுமன்ற பேரவை உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் எம். பீ, ஜனாதிபதி வழக்குரைஞர் பாயிஸ் முஸ்தபா, முஸ்லிம், பெளத்த பிரமுகர்கள் பலரும் இதில் பங்குபற்றினர்.
-thinakaran
Leave a comment