நகரசபை உறுப்பினரின் தந்தை மீது தாக்குதல்: ‘கபே” அமைப்பிடம் புகார்

ஏறாவூர் நகரசபை உறுப்பினரான பூபாலரெட்ணம் சசிதரன் என்பவரின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சசிதரன் நீதியானதும் சுதந்திரமானதுமான உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிடம் ‘கபே” புகார் தெரிவித்துள்ளார்.

அவர் தனது புகாரில்,

‘எனது தந்தை சாமித்தம்பி பூபாலரெட்ணம் (56) என்பவர் கடந்த 03.08.2012 அன்று மாலை 5.30 மணியளவில் தனது ஆட்டோ தரிப்பிடத்தில் ஆட்டோ வண்டியுடன் நிற்கும்போது இரண்டு நபர்கள் ஆட்டோ வண்டியில் ஏறி தளவாய்ப்பக்கம் கூட்டிச் சென்று அவர் நினைவிழக்கும் வரையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரை ஏறாவூர் சதாம் ஹ{ஸைன் முஸ்லிம் கிராம எல்லையில் போட்டு விட்டு ஆட்டோ வண்டியை சவுக்கடிப் பக்கம் எடுத்துச் சென்று தீ மூட்ட முற்பட்டுள்ளனர். பின்னர் அவ்விடத்தை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.

சதாம் ஹ{ஸைன் கிராம வாசிகள் அவ்விடத்தில் ஒரு சடலம் கிடப்பதாக ஏறாவூர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் உடன் விரைந்து சென்று அவரை அவ்விடத்திலிருந்து எடுத்து வந்து ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவர் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார். இப்பொழுது அவர் அவசர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனது தந்தைக்கு இதுவரை எதிரிகள் யாரும் இருந்திருக்கவில்லை. ஆனால், நான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது ஏறாவூர் நகரசபைக்குப் போட்டியிட்டுத் தெரிவான ஒரேயொரு தமிழ் உறுப்பினராவேன். நான் தற்போதைய மாகாணசபைத் தேர்தலில் ஒரு கட்சி சார்பாகப் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றேன். எனக்கு பல கோணங்களில் இருந்து என்னை வீழ்த்த அரசியல் சக்திகள் சதி செய்து வந்துள்ளனர். இருந்தும் என்னை அவர்களால் எதுவும் செய்து விடமுடியவில்லை என்ற ஆக்ரோசத்தினால் எனது தந்தையைப்பழி வாங்கவும் சிலவேளை அவரை அழிக்கவும் முற்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன்.

இது தேர்தல் காலமாகையால் அரசியல் ரீதியாக இனக்குழப்பங்களை ஏற்படுத்தவே இந்த நாசகார சக்திகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.”

இவ்வாறு அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக ‘கபே” தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹூஸைன் தெரிவித்தார்.

-வீரகேசரி

Published by

Leave a comment