வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது பள்ளிவாயல்களை உடைப்பதற்கான அங்கீகாரம்: முபீன்

வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது நமது பள்ளிவாயல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே முபீன் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முபீன், முஸ்லிம்கள் எவரும் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள்.

முஸ்லிம்களுக்கெதிராக இந்த நாட்டில் இடம் பெற்றுவரும் அநியாயங்களை முஸ்லிம்கள் பார்த்து விட்டும் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என்றால் அது நாம் நமது பள்ளிவாயல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரமாகும்.

தம்புள்ளையில் பள்ளிவாயலை உடைத்த போது அதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதே போன்று தெஹிவளையில் தௌஹீத் பள்ளிவாயல் மீதும் பேரினவாத சக்திகள் காடைத்தனம் செய்தனர். அதே போன்று குருநாகல் கிராமமொன்றில் பள்ளிவாயலில் நோன்பு காலத்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பள்ளிவாயலை சுற்றி வளைத்த பேரினவாத பௌத்த தேரர்கள் ‘பிரித்” ஓதினார்கள்.

இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றப்படும் இந்த அராஜகங்கள் முஸ்லிம்களின் புனித பள்ளிவாயலை உடைக்க முற்படும் இந்த நடவடிக்கைகள் முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கெதிராக கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவைகளை பார்த்துக்கொண்டும் முஸ்லிம்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க முடியாது.

தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீமின் குரல் முதன் முதலாக காத்தான்குடியில் வைத்து ஒலித்த போது இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் வாய் திறக்க ஆரம்பித்தனர். றஊப் ஹக்கீம் பகிரங்கமாக அரசாங்கத்தை இந்த விகாரத்தில் விமர்சித்த போது அல்ஜெஸீறா தொலைக்காட்சி தொடக்கம் உலக முஸ்லிம் நாடுகளிலுள்ள பல ஊடக நிறுவனங்கள் தம்புள்ளை பள்ளிவாயலை நோக்கி வருகை தந்தன.

ஈரான் நாட்டு ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடினார். இதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் ஆணித்தரமான கருத்தாகும்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாற்றுக் கட்சியிலிருந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் அணி திரளுகின்றனர். எனவே தான் வாக்குகளை சிதறடிக்காமல் முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களிக்க வேண்டும்

மேலும் நான் இந்த பகுதியில் தொடர்ந்து மக்களோடு இருந்து சேவையாற்றி வருகின்றேன் எனவே தொடர்ந்தும் உங்களோடு இருந்து சேவையாற்ற எனக்கும் இந்த தேர்தலில் அங்கீகாரம் தாருங்கள் என அவர் இதன் போது தெரிவித்தார்.

-வீரகேசரி

Published by

Leave a comment