பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான இஸட் புள்ளி முறைமையை உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் ௭ன்று அரசாங்கத்திடம் ஐ.தே.க.வின் தலைவரும் ௭திர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். முன்னைய இஸட் புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களையும் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு தெரிவான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் ௭ன்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று புதன்கிழமை இஸட் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், காலிங்க பாகு மகாராஜா ரஜரட்டையை அழித்தொழித்தது போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்று நாட்டில் கல்வித் துறையை சீர்குலைத்துள்ளது. மன்னாருக்கு பாலத்தினூடாகவே செல்ல வேண்டும் அது அழித்தொழிக்கப்பட்டால் மன்னாருக்கு செல்ல முடியாது அதே போன்று உயர் கல்விக்கு பின்னர் பல்கலைக்கழகத்திற்கு உள்ளிடுவதற்கான விடயம் முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இஸட் புள்ளிகள் தொடர்பிலான குளறுபடிகளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தில் மெத்தனப் போக்கே காரணமாகும். இதற்கான ழுழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முன்னைய இஸட் புள்ளிகள் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு தெரிவான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இணைத்து கொள்ள வேண்டும்.
இதைவிடுத்து மாணவர்களுக்கு அநீதி ஏற்படும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் பாராளுமன்ற கல்வி ஆலோசøனக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
இதன் போது சட்ட வல்லுநர்கள், சட்ட மா அதிபர், மாணவர்கள், பெற்றோர்கள் சிவில் அமைப்புக்கள் அனைவரையும் அழைத்து பேச வேண்டும் கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து உயர்கல்வி அமைச்சரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரும் செயலாளரும் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதால் மாணவர்களுக்கு எதுவிதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
அத்தோடு அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அங்கு வசதிகள் இல்லாவிட்டால் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். அரச பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
அண்மையில் அரசாங்கம் பிணை முறிவுக் கடனாக 1000 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளது. இத் தொகையில் 100 மில்லியன் டொலரை பல்கலைக்கழக அபிவிருத்திக்கு ஒதுக்குவதோடு அதன் மூலம் அவசரமாக தேவைப்படும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய வேண்டும்.
சுகபோகங்களுக்காக அவசர அவசரமாக கார்களை கொள்வனவு செய்ய முடியுமென்றால் ஏன் பல்கலைக்கழகங்களை அவசர அவசரமாக அபிவிருத்தி செய்ய முடியாது. அம்பாந்தோட்டையில் துறைமுகம், விமான நிலையம் அமைக்க முடியுமானால் ஏன் அனைத்து வசதிகளையும் கொண்ட பெரும்பாலான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் விதத்தில் பல்கலைக் கழகங்களை நிர்மாணிக்க முடியாது. இஸட் புள்ளிகளால் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க எதிர்வரும் 6 ஆம் திகதி பல தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகளை முன்னெடுப்போம்.
அத்தோடு பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். நாட்டில் இன்று பரீட்சைகள் தொடர்பாக மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இஸட் ஸ்கோர் மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது எனவே இதனை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். நியாயமான நீதியான முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் மாணவர்களையும் பெற்றோர்களையும் வீதியில் இறக்கி போராடுவோம் என்றார்.
இந்த நிகழ்வில் கொழும்பு மாநகர சபை மேயர் ஏ. ஜே.எம். முஸம்மில், எம். பி.க்களான ருவன் விஜேவர்தன, அகிலவிராஜ் காரியவசம், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-வீரகேசரி
Leave a comment