நோன்பும் பெருநாளும்….

-மௌலவி KLM. இப்றாஹீம் மதனி

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

விளக்கம்: ஒருவர் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்றால் அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராக அல்லாஹ்விடத்தில் கருதப்படுவார். அதாவது, அல்லாஹ்விடத்தில் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும். இந்த அடிப்படையில் ரமளான் மாத முப்பது நோன்பிற்கு முன்னூறு நன்மைகளும் ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நன்மைகளும் கிடைக்கும். மொத்தம் முன்னூற்றி அறுபதாகும். இதுவே ஒரு வருட நாட்களின் கிட்டத்தட்ட எண்ணிக்கையாகும். அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.

நோன்பின் ஒழுக்கங்கள்

1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.

2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

3) நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால். நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.

4) ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும் கூட, விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். பஜ்ர் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணக்கூடாது. இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.

5) ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.

6) நோன்பாளி அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ளவேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருள் ஈட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.

7) கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத்தேடி, பெற்றுக் கொள்ளவேண்டும்.

8) பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஸதகத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தர்மத்தை முறையாக கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிக்கும் செயல்கள்

1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.

2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இத்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.

 பெருநாள் தொழுகை

1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா)

4) நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உன்றுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த திக்ரும் இல்லை. அல்லாஹ்வை புகழக்கூடிய, பெருமைப்படுத்தக்கூடிய, துதிக்கக்கூடிய வார்த்தைகளை கூற வேண்டும். உதாரணமாக

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ الله ُ، وَالله ُأَكْبَرُ

பெருநாள் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ இல்லை. பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்தும் இல்லை.

–சுவனப்பாதை

 

 

 

Published by

Leave a comment