நீதித் துறையின் சுயாதிபத்தியம், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையில் எனக்குண்டு. அதேவேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும், அரசியல்வாதி என்ற முறையிலும் சமூகத்தைப் பற்றிய கரிசனையும் என்னிடம் காணப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில், மன்னாரில் அண்மையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் அதனை மிகவும் பக்குவமாக அணுகி உரிய தீர்வைப் பெறுவதற்கு உதவுவேன். இவ்வாறு நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மன்னார், உப்புக்குளம் ஜும்மா பள்ளி வாசலில் சனிக்கிழமை (28) அப் பிரதேச மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மன்னாரில் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் அண்மையில் நடந்த சம்பவம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார். பிரஸ்தாப சம்பவம் தொடர்பில் நிலை மையை நேரில் அவதானிப்பதற்காக அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டிருந் தார். நீதிமன்றத்தின் முன் வழக்கு உள்ள சந்தர்ப்பத்தில் மன்னார் நீதிமன்றத்துக்கு செல்வதை அவர் தவிர்த்துக்கொண்டார்.
உப்புக்குளம் பள்ளிவாசலில் அதன் தலைவர் ஆலம் மீன்பிடி சமாஜத்தின் தலைவர் அலாம் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர். வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் முத்தலிபாபா பாரூக், சட்டத்தரணி என். எம். சபூர்தீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, மன்னார் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தில் இந்தச் சம் பவம் நடந்து கொண்டிருந்த அதேவேளை யில் நீதிச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அப்பிரதேசத்தில் அமைதியின்மை நிலவுவதாக எனக்கு அறிவிக்கும்படி பிரதம நீதியரசர் கூறியதாக சொன்னார்.
அன்றைய தினம், நாங்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டி யிடுவது என்ற முடிவை மேற்கொண்டு, கட்சி தலைமையகத்தில் 24 மணித்தியா லங்களுக்குள் மூன்று மாவட்டங்களுக்குமான வேட்பாளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் அந்த தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.
உடனடியாகவே ஸ்தலத்துக்கு செல்வதற்கு முடியாத நிலையில் இருந்ததால் பொலிஸ் உயர் அதிகாரியுடன் தொடர்புகொண்டு நிலைமையை அறிந்துகொண்டேன். இது பற்றி நானும், ஜனாதிபதியும் இரு தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். தற்பொழுது குற்றப் புல னாய்வு துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை திரட்டி வரு கின்றனர். கிடைக்கும் தகவல்கள் விரைவில் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்ப டவுள்ளன.
இந்தச் சம்பவத்தில், 13 இளைஞர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஏனைய 32 பேர் தொடர்பாக சந்தேகம் நிலவுவதாகவும் கூறப்படுகின்றது. இவர்களைப்பற்றி உரிய கவனம் செலுத்தப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நாம் நல்லுறவை பேணி வருகின்றோம். அவர்களுக்கும் சமய தலைவர்களுக்கும் எங்களுக்குமிடை யிலான நல்லுறவு நீடிப்பது அவசியமாகும் என்றார்.
கைது செய்யப்பட்டோரில் தாய்மாரும், ஏனைய உறவினர்களும் பள்ளிவாசலில் வைத்து அமைச்சரை சந்தித்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் ஹக்கீமும் குழுவினரும் சர்ச்சையை தோற்றுவித்த கோந்தபிட்டி இறங்குதுறைக்கு சென்று நேரில் பார்வையிட்டனர்.
–தினகரன்
Leave a comment