-வாரஉரைகல்
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பொறியியலாளர் எம்.எப்.எம். சிப்லி அவர்களுக்கு அப்துர் றவூப் மௌலவி தரப்பினர் ஆதரவு வழங்குவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுவதாக அறியப்படுகின்றது.
அண்மையில் இத்தேர்தல் தொடர்பாக பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஒரு கலந்துரையாடலை அப்துர் றவூப் மௌலவி தரப்பு ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதன்போது கருத்துத் தெரிவித்த ஆதரவாளர்கள் பலரும் இம்முறை தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கதைகளைத் தங்களிடம் இனியும் கதைக்க வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதனை உறுதி செய்து கொள்வதற்காக பிரதி நகர முதல்வருடன் ‘வார உரைகல்’ தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை.
அப்துர் றவூப் மௌலவி அவர்களின் தாயார் காலமாகி 40ம் நாள் கத்தமுல் குர்ஆன் தமாம் செய்த விருந்துபசாரமும் சமீபத்தில் நடைபெற்றது. இதன்போது அங்கு வருகை தந்தவர்களை வரவேற்று அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த மௌலவி அவர்கள் சற்று நேரத்தின் பின் அங்கு காணப்படவில்லை.
இதனால் அங்கிருந்த பலரும் மௌலவி எங்கே..? என விசாரித்துக் கொண்டிருக்கையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தனது சகாக்களுடன் அங்கு சமூகமளித்தார். அவரை வரவேற்க மௌலவி அப்துர் றவூப் அவர்கள் அங்கிருக்கவில்லை.
‘மௌலவி எங்கே..?’ என பிரதியமைச்சர் வினவியதற்கு ‘நாங்களும் அவர்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இங்கேதான் சற்று முன்னர் நின்றார்கள். இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை’ என்றார்கள். இந்த பதிலினால் பிரதியமைச்சர் தரப்பினர் பலத்த ஏமாற்றம் அடைந்தார்களாம்.
பிரதியமைச்சர் தரப்பினரின் இவ்வருகையின் பின்னரே மௌலவி அவர்களும் மாயமானதன் தாற்பரியத்தை அங்கிருந்தோரும் ஊகித்துக் கொண்டார்களாம்.
இதேவேளை, அப்துர் றவூப் மௌலவி தரப்பினர் இம்முறை ஸ்ரீ.ல.மு.காங்கிரஸில் போட்டியிடும் முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஆஸாத் சாலி அவர்களுக்கே தமது ஆதரவை வழங்கவுள்ளதாகத் தீர்மானித்திருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது.
அவர் ஒரு சுன்னத்வல் ஜமாஅத்வாதி என்றும், ஏற்கனவே பத்ரிய்யா ஜும்ஆப்பள்ளிவாசல் கட்டிடப் பணிக்காக ஒரு தொகுதி சீமெந்தை அவர் அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஸ்ரீ.ல.மு.கா. தவிசாளரும், பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அவர்களும் அப்துர்றவூப் மௌலவி தரப்பினரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.
அண்மையில் முன்னாள் ஐ.ம.சு. கூட்டமைப்பு வேட்பாளரான அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை அவர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கூட்டில் இருந்து வெளியேறி பிரசுரம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் கடந்த நகர சபைத் தேர்தலின்போது அப்துர் றவூப் மௌலவி தரப்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் ஜெஸீமை தோற்கடிப்பதற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றி அவர் விலாவாரியாக விளக்கி இருந்தார்.
இதன் காரணமாகவே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கும் அப்துர் றவூப் மௌலவி தரப்புக்கும் இடையில் இப்போது காதல் கசந்து ஊடல் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எதற்கும் நமது வாசகர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். இப்போதுதான் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பிரதேசப் பிரமுகர்கள், சில்லறை வாக்கு வங்கிகள் மத்தியில் அரசியல் வியாபாரிகளின் பேரப் பேச்சுக்கள் ஆரம்பமாகி இருக்கின்றன. பலரும் தமது ‘டிமான்ட்’களை முன்வைத்து ‘பிகு’ பண்ணிக் கொண்டு சந்திப்புக்களைத் தவிர்த்தும், சந்தித்தும் வருகின்றனர்.
தாம் முன்வைக்கின்ற ‘கோரிக்கை’களுக்கு ஆகக்கூடுதலான பலன் கிடைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கே ஆதரவு தெரிவிக்கும் சுயலாப சக்திகளுக்கு நமது பிரதேசத்தில் பஞ்சமில்லை. சமூக நலன்களைப் பற்றியோ, தமது ஆதரவாளர்களின் நலன்களைப் பற்றியோ கடுகளவும் அக்கறை கொள்ளாது தமது பைகளும், கைகளும் நிரம்பினால் சரி என்று தீர்மானமெடுத்து இறுதி முடிவை அறிவித்து ஆதரவளிக்குமாறு கூறும் தரப்பாரும் எம்மத்தியில் இருக்கின்றனர்.
எனவே இன்று இப்படி இருப்பது நாளை அப்படியும் ஆகலாம். வாக்களிப்புத் தினத்தன்றும் அது எப்படியும் மாறலாம். எதற்கும் நாம் காத்திருப்போம்.
![rauff-mov-hiz-net[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/rauff-mov-hiz-net1.gif?w=144&h=124)

Leave a comment