லண்டன் ஒலிம்பிக் 2012: தொடக்க விழாவை ‘சட்டப்படி’ செய்துகாட்டியது பிரித்தாணியா! (படங்கள்)

-MJ

நேற்று (வெள்ளிக்கிழமை) ஓர் இனிமையான மாலைப்பொழுதில் லண்டன் நேரப்படி 9 மணிக்கு ஆரம்பமான ‘லண்டன் 2012’ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அதிகாலை ஒரு மணிவரை இடம் பெற்றிருந்தது.

ஒலிம்பிக் அரங்கில் 80,000 பார்வையாளர்களுக்கான இடவசதிகளே இருக்கின்றன. இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ராட்சத திரைகளில் ஒலிம்பிக் அரங்கிற்கு வெளியிலும் லண்டன் நகரிலும் இவ் ஆரம்ப விழாவைக் கண்டு மகிழ்ந்தனர். உலகின் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக இந்நிகழ்வை பார்த்திருந்தனர்.

உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், பிரித்தாணிய பிரதமர் டேவிட் கமரூன், பிரித்தாணியாவின் இராணி இரண்டாம் எலிசபெத், அரச பரம்பரைக் குடும்பத்தினர், உலக நாடுகளின் முன்னால் ஒலிம்பிக் வீரர்கள்,  மிக முக்கியமான பிரதிநிதிகள் (V.I.P) ஒலிம்பிக் அரங்கில் சூழ்ந்திருந்தனர்.

அதிகபட்சமான உயர்பாதுகாப்பு அதிகாரிகளும், இரகசிய கமரா கண்காணிப்பாளர்களும், இரகசிய புலனாய்வுப் பிரிவினர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களது காரியத்தை கற்சிதமாக நிறைவேற்றியிருந்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக 24 பில்லியன் பவுண்ஸ்களை பிரித்தாணியா அரசு செலவு செய்திருக்கிறது. முன்னர் 12 பில்லியன் பவுண்ஸ் என மதிப்பிடப்பட்ட இப்பெறுமதி பின்னர் அதிகரிக்கப்பட்டிருந்தது.

பிரித்தாணியர்களின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து தற்போதுள்ள நவீன காலம் வரை தங்களது வாழ்க்கை முறையினை சித்தரித்த கலை நிகழ்ச்சிகள் உலக மக்களை கவர்ந்து சென்றன. பல்லாயிரம் டிஜிட்டல் தொழிநுட்ப வர்ணவிளக்குகளால் அரங்கு ஜொலித்துக் கொண்டிருந்தது. கண்மூடி இமைப்பதற்குள் அரங்கில் கலாச்சார நிகழ்வுகளுக்கு தருவிக்கப்பட்ட பொருட்கள்  கணப்பொழுதில் அகற்றப்பட்டமை பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தன.

நேற்றிரவு லண்டன் நகரம் வான வேடிக்கையில் முழ்கியிருந்தது. பிரித்தாணிய இராணி உத்தியோகபூர்வமாக ‘லண்டன் 2012’ ஒலிம்பிக் போட்டியை ஆரம்பித்து வைத்தார். இது லண்டனில் நடைபெறும் 3வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒலிம்பிக் டோர்ச்’ ஒரு புதிய தொழிநுட்பத்தில் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் 204 நாடுகளையும் பிரதிபலிக்கும் வகையில் 204 குவளைகளிலும் தீ பற்றி, ஒருமித்து எழுந்து இச்சுடர் ஒளிர்ந்ததும் பார்வையாளர்களை மகிழ்வித்துச் சென்றது.

ஓரு சிரேஷ்ட போட்டிகளை ஓர் நாடு தனியாக நடாத்துவதற்கு, மனிதவளமும் பொருளாதாரமும் இன்றியமையாதது. ஓர் வீரர் வந்து சேர்ந்ததில் இருந்து அவர் நாடு திரும்பும்வரைக்கான செலவில் இருந்து அவருக்கான பாதுகாப்பு, மருத்துவம் அனைத்தையும் போட்டிகளை நடாத்தும் நாடுகள் பொறுப்பேற்கவேண்டும்.

ஒரு சுதந்திர தின விழாவை நடாத்தி முடிப்பது போல் ஏற்பாடுகள் இருக்க முடியாது. உண்மையில் ஓர் அபிவிருத்தியடைந்த நாடுகளால்தான் இவ்வாறான போட்டிகளை நடாத்த முடியும். 24 பில்லியன் பவுண்களும் நேர்மையான முறையில் செலவு செய்யப்படும். ஊழல், அரசியல் வாதிகளின் ‘பக்கட்’ டில் போவது, தங்களது வைப்பில் இடுவது.. இவ்வாறான நாட்டுத் துரோகிகள் இருக்கும் நாடுகளில் இவ்வாறான  போட்டிகளை எப்படி நடாத்த முடியும் என்பது ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

இதுவரை இடம்பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்ச்சிகளில் அதிக மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த ஓர் ஆரம்ப நிகழ்ச்சியாக 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ‘சிட்னி ஒலிம்பிக்’ இருந்து வந்தது. எனினும் இம்முறை பிரித்தாணியா தனக்குரிய அதி தொழிநுட்பங்களையும் மதிநுட்பங்களையும் பயன்படுத்தி ‘சட்டப்படி’யான ஓர் நிகழ்ச்சியை உலக மக்களுக்கு விருந்தாகப் படைத்திருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை! அது உண்மையும்கூட!!

 

 

 

Published by

Leave a comment