மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலரால் தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா குற்றம் சாட்டுகின்றார்.
மீள் குடியேற்ற துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அவர்கள், தான் கலந்து கொள்ளும் அரசாங்க பொது வைபவங்களில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களுடன் கலந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா கூறுகின்றார்.
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, திகதி அறிவிக்கப்பட்டு ஒரு வார காலததிற்குள் பட்டிருப்பு தொகுதியிலுள்ள இரண்டு பள்ளிக் கூடங்களில் புதிய கட்டிட வேலைகளை ஆரம்பிக்கும் வைபவங்களில் கலந்து கொண்ட துணை அமைச்சருடன் குறித்த இரண்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டதாகவும் கூறும் அவர், இந் நிகழ்வுகளில் அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகைளை மேற்கொண்டதாகவும் கூறுகின்றார்.
இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்று கூறிய அவர், தமது கட்சியின் தலைமைப் பீடம் இதனை தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படல் மற்றும் அச்சுறுத்தல்கள் உட்பட இதுவரை 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ.மனாஸ் கூறுகின்றார்
ஏறாவுர் தபால் நிலைய கட்டிடத்தின் மேற்பகுதியை தொடர்ந்தும் பாவித்து வரும் முன்னாள் மாகாண அமைச்சரொருவர் அதனை தேர்தல் பிரச்சார அலுவலகமாக பாவிப்பது பற்றி தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
சுயேட்சைக் குழுவொன்றிற்கு தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமருக்கு எச்சரிக்கை கடிதமொன்று கிடைத்தமை பற்றியும் தமது கவனத்திற்கு வந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
-BBC/Tamil
Leave a comment