– இன்றைய தினகரன் வா.ம. ஆசிரியர் தலைப்பு
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினங்களான தமிழ்மொழி பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பாரியதும் நிரந்தரமானதுமான பிளவை ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் தற்போது எழுந்து வருகின்றது. குறுங் கட்சிகளினாலும், அக்கட்சிகளினது வேட்பாளர்களினாலும் எழுப்பப்பட்டுவரும் இனத் துவேசமான பிரசாரக் கருத்துக்கள் இன,மத, பிரதேச ஒற்றுமையை விரும்பும் மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்திவருகிறது. அத்துடன் இச்செயலானது அரசாங்கத்தின் மீது வேண்டுமென்றே பழியைப் போடும் ஒரு முயற்சியாகவும் அமைந்துள்ள மையை அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மூலமாக அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றும் குறுகிய நோக்கில் இன ரீதியான கருத்துக்களை வெளிப்படையாகவே கக்கி ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் இரு சமூகங்களையும் பிரித்து வைப்பதில் சிலர் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். கிழக்கில் முதலமைச்சர் பதவி என்பது இரு சமூகங்களும் இணைந்து தீர்மானிக்க வேண்டியதொரு விடயமாகும். அவ்விடயத்தில் வேட்பு மனுத் தாக்கலின் முன்பாகக் கோட்டை விட்டுவிட்டு இப்போது பிரசார மேடைகளில் ஒரு சமூகத்தை மற்றைய சமூகம் சாடி வருவதில் அர்த்தமில்லை.
கடந்த தேர்தலில் இரு சமூகங்களும் ஒற்றுமையுடனும், விட்டுக் கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டமையினால் சுமுகமானதொரு தீர்வு காணப்பட்டதுடன் கடந்த மூன்றரை வருடங்களாக அம்மாகாணம் பாரிய அபிவிருத்தியையும் கண்டது. அதற்கு மற்றுமொரு பிரதான காரணமாக அரசாங்கம் இம்மாகாணத்தின் ஆட்சியை தானே நேரடியாக முன்னெடுத்து வந்தமையே என்றுதான் கூற வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான பலரும் அமைச்சர்களாக இருப்பதனால் இது மேலும் சாத்தியமாகியது.
இந்நிலையில் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவை ஒவ்வொன்றும் தமக்கிடையே பல எதிர்பார்ப்புக்களைத் கொண்டே களமிறங்கியுள்ளன. அதில் சில கட்சிகள் முதலமைச்சர் பதவியைக் கைபற்றி ஆட்சியை பெரும்பான்மைப் பலத்துடன் கைப்பற்றுவதை நோக்காகக் கொண்டுள்ளன. சில கட்சிகள் அரசாங்கக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றில் ஒன்று ஆட்சியமைக்க பலம் காணாது தமது உதவியைக் கோரினால் சிலபல நிறைவேற்றக் கூடியதும் , நிறைவேற்றப்பட முடியாததுமான கோரிக்கைகளை முன்வைத்து பேரம்பேசி முரண்டுபிடித்தும் தாம் தான் பேரம்பேசி ஆட்சியை நிர்ணயிக்கும் கட்சி என்பதை வெளியுலகிற்குக் காட்டுவதற்காக என்றும் போட்டியிடுகின்றன. இன்னும் சில கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமிழரினதும், முஸ்லிம்களினதும் வாக்குகளைப் பிரித்து ஒருவரும் பலத்துடன் ஆட்சியமைக்க முடியாதவாறு திணற வேண்டுமெனும் நோக்கிலும் களமிறங்கியுள்ளன. இன்னும் சில கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமிழரினதும், முஸ்லிம்களினதும் வாக்குகளைப் பிரித்து ஒருவரும் பலத்துடன் ஆட்சியமைக்க முடியாதவாறு திணற வேண்டுமெனும் நோக்கிலும் களமிறங்கியுள்ளன. இன்னும் சில கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தாம் எதற்காப் போட்டியிடுகின்றோம் என்பது தெரியாமலேயே போட்டியிடுகின்றன. அதிலும் வேடிக்கையான விடயம் என்னவென்றால் இவ்வாறான சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட தமது பெயர்களைக் கொடுத்தவர்களுக்கு தாமும் வேட்பாளர்கள் என்பது காலம் தாழ்த்தியே தெரியும். அவர்களிடம் சாட்சிக் கையொப்பம் வாங்குவது போன்று வாங்கி அவர்களையும் வேட்பாளர்பட்டியலில் சில கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களினதும் தலைவர்கள் இணைத்துள்ளனர். இதனால் இவர்களில் பலருக்கு இப்போது ஊருக்குள் தலைகாட்டமுடியாதுள்ளதுடன்,சிலருக்குத் தமது வீட்டிற்கு செல்ல முடியாதுள்ளதாகவும் கள நிலவரம் தெரிவிக்கிறது.
இத்தகைய சுவாரஷ்யம் நிறைந்துள்ள கிழக்குத் தேர்தலில் ஒருபோதும் இனவாதத்திற்கு இடமளித்தல் கூடாது. நாட்டில் பெரும்பான்மையினச் சிங்கள மக்களுடன் விடுதலைப்புலிகளினதும், அன்றைய தமிழ்த் தலைவர்களினதும் பேச்சைக் கேட்டு தமிழினம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளத் தவறியமையால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்த கொடுமைகள் போதும். அதுவே எமக்கொரு பாடமாக அமைய வேண்டும். அதுபோன்றதொரு நிலைமையை சிறுபான்மையினங்களுக்கிடையே தோற்றுவிக்க வேண்டுமா?
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டிருந்தது. வெளிப்படையாக அதனைக் காட்டிக் கொள்ளாவிடினும் உள்ளார இரு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டே இருந்தன. புலிகளால் வடக்கிலிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுகையில் ஈடிபட்டிருந்த எதுவுமே அறியாத அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலைகள் என்பன எவரையும் புலிகள் மீதும், அவர்கள் சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீது வெறுப்புக் கொள்ளவே செய்யும். அதேபோன்று புலிகளின் பாதகச் செயலுக்காக முஸ்லிம் ஊர்காவற்படையினர் குழுவொன்று கிழக்கில் அப்பாவி தமிழ் மக்கள் மீது நடந்து கொண்ட முறைமையும் தமிழ்ச் சமூகத்தால் இலகுவில் மறந்துவிட முடியாது. ஆனால் இன்று அவையெல்லாம் ஓரளவு மறக்கப்பட வேண்டிய விடயங்களாகி விட்டன. புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள். இனியும் பழைய கதைகளைக் கிளறிக் கொண்டிருந்தால் இரு சமூகங்களினதும் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும். ஒருவரையொருவர் குற்றம் சாட்ட முனைந்தால் இரு தரப்பு வாதங்களையும், தமது கமூகத்திற்கு நடந்த கொடுமைகளையும் இருதரப்புமே முன்வைக்க முயலும் இது இப்போது தேவையற்ற விடயம். ஆனால் நடைபெறவுள்ள தேர்தலில் அவை கிளறப்படலாம். அதனைத் தடுப்பதே வாக்களிக்கவுள்ள மக்களது பொறுப்பாக உள்ளது.
தமது தேர்தல் பிரசார மேடைகளில் எந்தெந்தக் கட்சிகள் இன ரீதியான கருத்துக்களை முன்வைத்துச் செயற்படுகின்றனவோ மக்கள் அவற்றை நிராகரிக்க வேண்டும். பிரசாரத்தில் போட்டி இருக்கலாம். கருத்து மோதல்கள் இடம்பெறலாம். ஆனால் அதுவே இன விரிசலுக்கான இடமாக அமைந்து விடக் கூடாது. அதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
அதேபோன்று தமிழ் மக்களும், முஸ்லிம்களும், சில சிங்களச் சகோதரர்களும் இணைந்து ஓரணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
அந்தவகையில் அரசாங்கக் கட்சியில் அனைத்து இன,மத,மொழி, பேசும் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் போட்டியிடுகின்றனர். அரசாங்கம் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியதும் அங்கு பாரிய அபிவிருத்தியைச் செய்து வருகின்றது. இப்போதும் ஐயாயிரத் திற்கும் அதிகமான மில்லியன் ரூபாவை அரசாங்கம் கிழக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கி யுள்ளது. சுற்றுலாத்துறையில் கிழக்கு தன்னிறைவு காணவுள்ளது. இதன் மூலமாக பல உள்ளுர் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் தமது பொருட்களைச் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்கில் தமிழ்,முஸ்லிம் ஒற்றுமைக்குக் குந்தகம்ஏற்பட்டுவிடாது பாதுகாப்பது அனைவரினதும் கடமையும்,பொறுப்புமாகும். இன வாதம், பிரதேசவாதம், மதவாதம்பேசும் கட்சிகளுக்கு கிழக்கு மக்கள் இம்முறை தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எந்த வகையிலும் தமிழ் முஸ்லிம் உறவைப் பிரித்தாள நினைப்போருக்கு இடமளிக்காது அவர்களை அம்மாகாணத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும். அரசாங்கத்தின் இன ஒற்றுமை மற்றும் துரித அபிவிருத்தி எனும் உயரிய கொள்கைக்கு மதிப்பளித்து மக்கள் செயற்பட முன்வர வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தது போன்று இந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் என்று எவருமில்லை. அவ்வாறிருக்க இனங்களைப் பிரித்துப் பேசியோ அல்லது சிறுபான்மைக்குள் சிறுபான்மை என்று தந்திரமாகப் பேசியோ வாக்குகளை அபகரிக்க ஒருவருக்கும் இடமளிக்காது நாமனைவரும் இலங்கையர் என நினைத்தச் செயற்பட முன்வருவோமாக.
Leave a comment