அரசியலிலிருந்து என்னை ஓரங்கட்ட வேண்டுமென்ற ஒரே நோக்கில் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிகளின் இன்னொரு வடிவமே மன்னார் சம்பவத்தையும் தன்னையும் தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சியாகுமென முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது அப்பட்டமான பொய்யென அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தாம் தனித்துப் போட்டியிட மேற்கொண்ட திட்டத்துக்கு மூன்று நாடகங்களை அரசியல் அரங்கில் மேடையேற்றியது.
முதலாவது: கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸனலி எம்.பியை பயன்படுத்தி, தமிழ்க் கூட்டமைப்புடன் முகா இணைந்து போட்டியிட பேச்சு நடத்துவதாகவும் அது சாத்தியப்படாத பட்சத்தில் தனித்துப் போட்டியிட எண்ணு வதாகவும் ஒரு கதையைச் சோடித்தது. இரண்டாவது நாடகமே கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் பசீர் சேகு தாவூத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் கட்சிகளை பொதுச் சின்னத்தில் போட்டியிட வைக்க மேற் கொள்ளப்பட்ட முயற்சியாகும். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக வெளியுலகுக்கும் முஸ்லிம்களுக்கும் வெளிக் காட்டுவதே இந்த நாடகத்தின் உள்நோக்கமும் கருப்பொருளுமாகும். பிரதியமைச்சர் பசீர் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே வேளை கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இன்னுமொரு நாடகத்தை அரங்கேற்றினார்.
ஜனாதிபதியிடம் சென்று தனக்கு இவ்வாறான பல பிரச்சினைகள் இருப்பதாகவும் இதற்கு முகம் கொடுப்பதானால் வேட்பாளர்பட்டியலில் கூடுதல் ஒதுக்கீடுகள் தேவை என அவருக்கு அழுத்தம் கொடுத்தார். இந்தக் கோரிக்கை சாத்தியப்படாத கோரிக்கை என்று தெரிந்திருந்தும் முகா தலைமை இவ்வாறு செயற்பட்டது. முகாவின் உயர்பீடம் அடிக்கடி கூடியதும் வெளியுலகத்திற்கும் அரசுக்கும் கட்சிக்கும் அழுத்தமெனக் காட்டுவதற்கே. இது தான் உண்மையான நிலை.
அம்பாறையைப் பொறுத்தவரையில் கடந்த முறை மு.கா – ஐ. தே. கவுடன் இணைந்து போட்டியிட்டும் ஆக 3 ஆசனங்களையே பெற்றது. அக்கட்சி எடுத்த வாக்குகள் சுமார் 55 ஆயிரம் மட்டுமே இம்முறை சில ஆயிரம் வாக்குகள் அதைவிடக் கூடப் பெற்றாலும் அந்தக்கட்சி 3 ஆசனங்களுக்கு மேல் பெறமுடியாது. இதுவே யதார்த்தம். இவ்வாறான சூழ்நிலையில் முகாவுக்கு ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் பட்டியலில் அம்பாறை மாவட்டத்தில் 4 வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டபோதும் அவர்கள் அதனை ஏற்கமறுத்ததன் உள்நோக்கம் தான் என்ன? திருமலை, மட்டக்களப்பிலும் இந்தக்கட்சியின் வாக்கு வங்கிகள் குறிப்பிடத்தக்கனவே. என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் அவர்கள் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவே முடியாது. மேலும் வடக்கு- கிழக்கு இணைப்பு சதிவலைக்குள் முஸ்லிம் காங்கிரஸ் அகப்பட்டு விட்டது. கடந்த முறை கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முகாவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு மக்கள் வழங்கும் ஆணையென்றும் கூறினார். அக்கட்சியின் செயலாளர் ஹஸனலி எம்.பி வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக வெளியிட்ட பத்திரிகையறிக்கை யையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்
என்னை பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் மூலம் அரசாங்கமும் தேசிய காங்கிரசும் சில சக்திகளின் சதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-தினகரன்
Leave a comment