-MBM றிப்தி
வடக்கு முஸ்லீம்களுக்கு அண்மைக்காலமாக திட்டமிட்டு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு தீர்வுவேண்டி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லீம்கள் இன்றைய ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப்பேரணிகளை அவ்வப்பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்தனர்.
புனித ரமழானை முன்னிட்டு நீண்டதூர பேரணிகள் இடம்பெறாவிட்டாலும் அடையாள பேரணிகள் இலங்கையின் பல ஜூம்ஆ பள்ளிவாயல்களில் இன்று இடம்பெற்றிருந்தன.
இந்தவகையில் காத்தான்குடி முகைதீன் மெத்தை ஜூம்ஆ பள்ளிவாயலிலும் வடபுல முஸ்லீம்களின் சமகால பிரச்சினைகுறித்து எதிர்ப்பு பேரணி இடம்பெற்றது. உள்ளுர் அரசியல்வாதிகள், உலமாக்கள், கல்விமான்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். வடபுல முஸலீம்களின் மீள்குடியேற்றத்திற்கு உறுதியுடன் செயற்பட்டு வரும் பிரதியமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக குறித்த விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் 22 வருடங்களின் பின்னர் தமது தாயக மண்ணில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்குகெதிராக பல்வேறுபட்ட இன்னல்களும், தடைகளும் தொடர்ந்த வண்ணம் இருந்து வருவதும், சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கத்தோலிக்க மதகுரு ஓருவரும் குறித்த முஸ்லீம்களின் மீளக்குடியேற்ற விடயங்களில் தொடர்ந்தும் தடைக்கற்களாக இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு முஸ்லீம்களின் மீள்குடியேற்ற விடயங்களுக்கு சுயநலமில்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதில் பிரதியமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தன்னை அர்ப்பணித்து வந்தார். எனினும் ஒற்றுமையாக வாழும் சமூகங்களைப் பிரிக்கும் சதித்திட்டத்தில் இப்பகுதியில் குறிப்பிட்ட சிலர் புல்லுறுவி இருப்பதால், முஸ்லீம்களின் சொந்த இடங்களுக்கான மீள்குடியேற்றத்தில் இவர்கள் தொடர்ந்தும் இண்ணல்களை இழைத்து வருகின்றனர். பிரதியமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக ஓர் வழக்கும் குறித்த சமூக விரோதிகளால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.





Leave a comment