லண்டன் ஓலிம்பிக் 2012

பல்சுவைத் தகவல் (படங்களுடன்)

MJ

இன்று வெள்ளிக்கிழமை  லண்டன் நேரப்படி இரவு 9 மணிக்கு 30வது ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் லண்டன் நகரில் உள்ள ‘ஒலிம்பிக் பார்க்’ இல் கோலாகலமாக இடம்பெற இருக்கின்றது. ஆரம்ப விழாவுக்கான ஒத்திகைகள் நேற்று இரவு நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்திகை நிகழ்வைக்காண திரண்டிருந்தனர்.

ஒலிம்பிக் மற்றும் ‘பராலிம்பிக்’ எனும் வலது குறைந்தோருக்கான போட்டிகள் இம்முறை லண்டன் நகரில் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே சில போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற இருக்கின்றது.

லண்டன், ஸ்ரட்போர்ட் (Stratford) நகரில் 486 மில்லியன்ஸ் பவுண்ஸ் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஒலிம்பிக் பார்க்’ அரங்கில் இவ் ஆரம்ப நிகழ்வு சுமார் 3 மணித்தியாலங்கள் இடம் பெற இருக்கின்றன. 80,000 பார்வையாளர்கள் இவ் அரங்கில் நேரடியாக இந்நிகழ்வினை பார்க்கக்கூடிய வகையில் இம்மைதானத்தின் கொள்ளளவு அமைந்திருக்கின்றது.

ஸ்ரட்போர்ட் நகரை ஒலிம்பிக் விருந்தாளிகள் இவ்வாரம் ஆக்கிரமித்திருக்கின்றனர். பலத்த பாதுகாப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. சுமார் 10,400 விசேட ‘G4S’ (Group 4 Securicor) எனும் பாதுகாப்புப் படையினரும் 15,000 படைவீரர்களும், 10,000 தொண்டர்களும், ஆயிரக்கணக்கான புலனாய்வுப் பிரிவினர்களும், ஆயிரத்தைத் தாண்டிய அவசர சேவைப் பிரிவினர்களும், தீயணைப்புப் படையினரும், ஆயிரக்கணக்கான தாதியர்களும் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் லண்டன் ஒலிம்பிக்கில் தமது பங்களிப்பைச் செய்துவருகின்றனர்.

பாடசாலைகளும், கல்லூரிகளும் கோடைகால வழமையான விடுமறைக்காகவும், ஒலிம்பிக் போட்டிகளுக்காகவும் மூடப்பட்டுள்ளன. அதிகளவான மாணவ மாணவிகள் ஒலிம்பிக் தொடண்டர்களாக களமிறங்கியுள்ளனர்.

விமான நிலையங்களை விட தரைகீழ் (Under Ground) புகையிரத நிலையங்கள் பலத்த பாதுகாப்புக்குள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புக்காக மாத்திரம் 80 மில்லியன் பவுண்ஸ்களை பிரித்தாணிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

13,000 ஓளிபரப்பு நிறுவனங்கள் (Broadcasters) இன்றைய ஆரம்ப நிகழ்வை நேரடியாக ஒளிபரப்புச் செய்கின்றன. உலகில் உள்ள நூறு கோடி மக்கள் இந்நிகழ்வை நேரடியாகக் கண்டு மகிழவுள்ளனர்.

இதுவரை இடம்பெறாத பல கலாச்சார நிகழ்வுகளும், கண்களைக் கவரும் கலை நிகழ்ச்சிகளும், வான வேடிக்கைகளும் ஒலிம் பார்க் அரங்கை அசத்த இருக்கின்றன. உலகின் 5 கண்டங்களில் உள்ள 204 நாடுகிளில் இருந்தும் 10,490 வீரர்கள் ஒலிம்பிக் 2012ல் பங்கெடுக்கின்றனர். லண்டன் நகரிலும் மற்றும் பிரித்தாணியாவின் புகழ்மிக்க ஏனைய நகரங்களிலுமுள்ள சுமார் 35 இற்கும் கூடுதலான மைதானங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் தொடர்பான மேலதிக தகவல்கள் அவ்வப்போது எமது ‘உங்கள் காத்தான்குடி’ வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

-Pictures: UK Medias

Published by

Leave a comment