பாதுகாப்பு செயலருடன் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா பேச்சு
நோன்பு காலத்தில் இரவு நேரங்களில் தொழுகைகளில் ஈடுபடும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகப் பிரதியமைச்சர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் இரவு நேரங்களில் வீடுகளில் கூடி தொழுகைகளில் ஈடுபடுவது வழமை. இந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்குச் சென்றுவருவார்கள்.
இவ்வாறானவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தான் கோரிக்கை விடுத்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், இக்காலத்தில் பொலிஸாரின் இரவுநேர ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் முன்வந்துள்ளனர்.
அதேநேரம், குருநாகல் மற்றும் தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் ஏற்படும்போது அவை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளப்படவேண்டும். சமூக விடயங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசியல் வாதிகளால், அரசியல் இலாபத்துக்காக கையாளப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரதியமைச்சர் தினகரனுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டார்.
-தினகரன்
Leave a comment