பல்கலை அனுமதி கிடைக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு
இஸட் புள்ளிகளை (Z – Score) கணிப்பிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களில் குறித்த தொகையினரை பல்கலைக்கழகங் களுக்கு மேலதிகமாக சேர்த்துக்கொண்டு அவ்வாறானவர்களுக்கு நிவாரணமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உயர் கல்வி அமைச்சர் எஸ். பீ. திசாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அவ்வாறான மாணவர்களில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு எத்தனை பேர் வீதம் சேர்த்துக்கொள்ள முடியும் என அறிந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மொத்தமாக எத்தனை பேரை அவ்வாறு சேர்த்துக்கொள்ள முடியும் என்பது பற்றிய புள்ளிவிபர ரீதியான அறிக்கை ஒன்றினை தமக்கு மிகவும் விரைவாக பெற்றுத்தருமாறு ஜனாதிபதி அவர்கள் அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள் ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரை துரிதமாக அது பற்றிய புள்ளிவிபரங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இஸட் புள்ளிகளில் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வாக இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் எஸ். பீ. திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே, பரீட்சைகள் திணைக்களம் இம்முறை நடைபெறும் உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கு மேலதிக காலம் வழங்கியுள்ளதாகவும், இம்முறை பல்கலைக் கழகங்களுக்கு நுழைவதற்கு முடியாது போன மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அரசாங்கமும் மற்றும் உயர் கல்வி அமைச்சும் மேற்படி மாணவர்கள் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்களுக்கு அதிக நன்மை கிடைக்கக்கூடிய வகையில் செயற்படுவதாகவும் அதற்குத் தேவையான ஆலோசனை மற்றும் ஏற்பாடுகள் என்பவற்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெற்றுத் தந்துள்ளதாகவும் அமைச்சர் எஸ். பீ. திசாநாயக்க வலியுறுத்தினார்.
முன்னர் வெளியிடப்பட்ட இஸட் புள்ளிகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இரத்துச் செய்யப்பட்டு அண்மையில் புதிய இஸட் புள்ளிகள் வெளியிடப்பட்டன. இஸட் புள்ளிகள் கணிப்பிடும் முறையில் ஏற்பட்ட சிக்கலை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அதன் பிரகாரம் உச்ச நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள புதிய இஸட் புள்ளிகள் மூலம் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக கூறி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறானவர்களின் கூற்றுக்கள் மூலம் உச்ச நீதிமன்றம் அவமதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் எஸ். பீ. திசாநாயக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட புதிய இஸட் புள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக நீதிமன் றத்திடம் நியாயம் கேட்கப் போவதாகக் கூறுவது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் கூறினார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இம்முறை இஸட் புள்ளிகள் கணிப்பிடும்போது பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற பெற்றோர்களின் பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பிரதேச வாழ் மாணவர்களுக்கு அதிகம் நன்மை கிடைத்துள்ளதாகவும், இஸட் புள்ளிகள் குறைவடைந்துள்ளமை காரணமாக உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களம் கூறுவது போன்று 5 நாட்களுக்குள் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்து 13 நாட்களுக்குள் மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுதும் மனநிலை இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத் தியுள்ளார்.
அநீதிக்கு உள்ளாகியுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாது அவர்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே தாம் உள்ளிட்ட அனைவரதும் பொறுப்பாகுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயம்கிடைக்கக் கூடிய வகையில் பொருத்தமான நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-தினகரன்
Leave a comment