மட்டு. நிலைமைகளை ஆராய தேர்தல் ஆணையர் தலைமையில் விசேட கூட்டம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நிலைமைகளை ஆராய விசேட கூட்டமொன்றை நடத்தத் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் கண் காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் களநிலவரம் பற்றி ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இணக்கம் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான இணக்கம் காணப்பட்டதாகத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளானமை தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பரியவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். அத்துடன் கடந்த காலத் தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட நிலைமைகள் பற்றியும் தேர்தல்கள் ஆணையாளருக்கு விளக்கிக் கூறப்பட்டதாகவும் ரோஹன ஹேட்டி யாராச்சி குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து ஆராய தனியான கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய தேர்தல்கள் ஆணையாளர் இணக் கம் தெரிவித்தார். அது மாத்திரமன்றி மட்டக்களப்பு தேர்தல் களநிலைமைகள் குறித்த தேர்தல் கண்காணிப்பு அமைப் புக்களின் அறிக்கையொன்றை சமர்ப் பிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கூறினார்.

ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இதுவரை எந்தவிதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை எனினும், தேர்தல் விதிகளை மீறிய பிரசாரங்கள் பற்றிய பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக் கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment