நோன்பு: தெரியவேண்டிய விடயங்கள்…

– மௌலவி KLM இப்றாஹீம் மதனி

 இஃதிகாஃப்

இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)

1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசி பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி பள்ளியை விட்டும் வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். யாருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ, அவர்கள் சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளட்டும்.

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ”எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

 ஸதகத்துல் ஃபித்ர்

1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறி, இத்தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், நஸாயி)

4) நபி (ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி, ”தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றி திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் இத்தர்மத்தை கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு, இத்தர்மம் செய்தவர், நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக ”தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்” ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாம்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!

சட்டங்கள்: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக, மீதப் பொருள் மற்றும் தானியம் இருப்பின், அவர்கள் இத்தர்மத்தைக் கொடுக்க தகுதி பெறுவார்கள். பெருநாள் அன்று உண்ண தானியம் இல்லாதவர்கள், இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.

அளவு: நடுத்தரமான அளவுடைய ஒருவரின் இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு, ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு ஸதகத்துல் ஃபித்ர் கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே, கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும். இன்றைய நிறுவையின் படி, கிட்டத்தட்ட இரண்டரைக் கிலோ அரிசி வழங்குவது அதன் அளவாகும்.

நேரம்: இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தவர் இக்கடமையை நிறைவேற்றியவராகமாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.

 

 

 

Published by

Leave a comment