இலங்கையில் முன்னோடி மாவட்டமாக மிளிர்ந்து வரும் மீன்பாடும் தேன்நாடு

-எம். எஸ். பாஹிம்
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஊடகவியலாளர்களின் சுற்றுப் பயணத்தின் பின்னர் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.)

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு முக்கிய இடமுள்ளது எனலாம். மீன்பாடும் தேன் நாடு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மட்டக்களப்பு எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி) படுவான்கரை (சூரியன்மறையும் பகுதி) என இரு வாவிகளால் பிரிக்கப்படுகிறது.

பொதுவாக வெப்பம் கூடிய பிரதேசமாக இருப்பினும் வேறுபட்ட பருவ காலங்களில் வேறுபட்ட மாற்றங்களை கொண்ட மட்டக்களப்பு இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள், வாவிகள், தீவுகள், மலைகள் என சகல வளங்களும் நிறைந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக தமிழ் மக்களும் அடுத்து முஸ்லிம்களும் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பேர்கர், சிங்களவர் ஆகிய இனத்தவரும் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். விவசாயம், மீன்பிடித் துறை, கால்நடை வளர்ப்பு என்பனவே இங்கு பிரதான வாழ்வாதார வழிகளாகும்.

முப்பது வருட யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்டமும் ஒன்று. யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து மட்டக்களப்பு மாவட்டமே முதலில் மீண்டெழுந்தது.

இதற்கு இப்பிரதேச மக்களின் மனோ தைரியம் மட்டுமன்றி அரசாங்கத்தின் கூடுதல் கரிசனையும் முக்கிய காரணம் எனலாம்.

போரினால் சேதமடைந்த வடக்கு கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு ஆட்சிக் காலங்களில் கரிசனை செலுத்தப்படாத மின்சாரம், குடிநீர் வசதி விவசாயம், மீன்பிடித்துறை, உட்கட்டமைப்பு வசதி, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றுலாத்துறை என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் பணம் நீராய் இறைக்கப்பட்டு வருகிறது. எங்கு சென்றாலும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தி முன்னெடுப்புகளையுமே காண முடிகிறது. கடந்த 3 வருட காலத்தில் மாத்திரம் நினைத்துப் பார்க்க முடியாதளவு அபிவிருத்தி இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெல் உற்பத்தி

இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டு மாவட்டம் பெரும் பாங்காற்றி வருகிறது. நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 12 வீத பங்களிப்பு இங்கிருந்தே வழங்கப்படுகிறது. 2008 இல் 2 வீத நெல் உற்பத்தியே செய்யப்பட்டது. ஆனால் 2011/12 காலத்தில் 2 இலட்சத்து 39 ஆயிரம் டொன் நெல் மட்டக்களப்பில் உற்பத்தி செய்யப்பட்டது. இப்பிரதேச நுகர்வுக்கு ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசி தேவைப்படும் நிலையில் நாடு நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைய மீன்பாடும் தேனாட்டின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

விவசாயத்துக்கு தேவையான நீரை தடையின்றி வழங்குவதற்காக சகல ஏற்பாடுகளும்கடந்த காலத்தில் செய்யப்பட்டதும் இந்த வெற்றிக்கு பங்களித்தது. கடந்த 5 வருடகாலத்தில் 3 பிரதான நீர்த்தேக்கங்களும் 3 நடுத்தர அளவான வாவிகளும் 206 சிறிய ரக குளங்களும் புனரமைக்கப்பட்டன. இதற்காக 1423.5 மில்லியன் செலவிடப்பட்டது.

மீன்பிடித்துறை வளர்ச்சி

மீன்பிடி உற்பத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டம் முன்னிலையில் உள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் இங்கு 44 ஆயிரம் மெற்றிக் தொன் மீன் பிடிக்கப்பட்டது. மீனவர்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் சகல வித உதவிகள் நிவாரணங்கள் வழங்கவும் கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இத்தனை காலமும் மட்டு. மாவட்டத்தில் ஒரு மீன் பிடித் துறைமுகம் கூட இருக்காத நிலையில் அந்தக் குறையும் கடந்த வருடம் தீர்க்கப்பட்டது. வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டது. இதற்காக 43 கோடி செலவிடப்பட்டது.

இந்த மீன்பிடித் துறைமுகத்தை சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் படகு உரிமையாளர்கள், மீன் வியாபாரிகள் என சுமார் 25 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர். 450 இற்கும் அதிகமான படகுகள் இந்தத் துறைமுகத்தினூடாக மீன்பிடித் தொழில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 22,214 மீனவ குடும்பங்கள் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ளன. இம் மாவட்டத்தின் மீன்பிடித் துறை வளர்ச்சிக்காக கடந்த 2005 முதல் இன்று வரை 1400.78 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டம் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. வருடாந்தம் 2.5 மில்லியன் லீட்டர் பால் இங்கு உற்பத்தி செய்யப்படுவதோடு அதன் பெரும் பகுதி நெஸ்லே நிறுவனக் கொள்வனவு செய்கிறது. இதனால் பாலுற்பத்தி மூலம் பாற் பண்ணையாளர்கள் லாபமடைந்து வருகின்றனர். கால்நடை அபிவிருத்திக்கு மத்திய அரசும் கிழக்கு மாகாண சபையும் தேவையான வசதிகள் தி|Zu உதவிகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

5 வருடத்தில் 54.000 மில்லியன்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மட்டுமன்றி பிரதேச முன்னேற்றத்திலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த 5 வருடத்தில் மாத்திரம் மட்டு மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கம் 54 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இதனுடன் இணைந்ததாக அடுத்த வருடம் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி இங்கே நடைபெற உள்ளது. இதனால் 12516 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தவிர 100 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்ய மேலும் 5500 மில்லியன் ரூபா நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

துரித வீதி அபிவிருத்தி

ஒரு பிரதேசத்தின் முன்னேற்றத்தில் வீதிக் கட்டமைப்பு முக்கிய இடம் வகிக்கிறது. யுத்தத்தினாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் நாசமடைந்த மட்டு மாவட்டத்திலுள்ள வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன. மேலும் பல வீதிகள் துரித கதியில் புனரமைக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக எள்ளது.

கடந்த 6 வருட காலத்தில் 2231.5 கிலோ மீட்டர் நீளமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏ, பீ தர வீதிகள், கிராமிய வீதிகள், விவசாய வீதிகள் உட்பட சகல தரத்திலான வீதிகளும் அடங்கும். இதற்காக 12,638.71 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 9613.71 மில்லியன் ரூபாவும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்கீழ் 2388 மில்லியன் ரூபாவும் உள்ளூராட்சி திணைக்களத்தினூடாக 318 மில்லியன் ரூபாவும் கமநெகும திட்டத்தின் கீழ் 970 மில்லியன் ரூபாவும் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 2613 மில்லியன் ரூபா செலவில் பிரதான நகர, கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதனூடாக பயண நேரம் 40 வீதத்தினால் குறைவடைவதோடு எரிபொருள் செலவு 30 வீதத்தினால் குறைவது மக்களுக்கு கிடைத்த பெரும் நன்மையாகும். பெருமளவு பாலங்களும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. பல வருடங்கள் தாமதித்த கல்லடி பாலம் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் பெப்ரவரியில் இந்த பாலம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும்.

மின் வசதி
இந்த வருட முடிவுக்குள் அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கும் நோக்குடன் கிராமிய மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 563.91 மில்லியன் செலவில் இடம்பெறும் இந்தத் திட்டங்கள் மூலம் மக்களும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். அடுத்த ஜனவரி மாதம் ஆகும் போது மட்டு மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத எந்த ஒரு வீடும் இருக்காது என பிரதி அமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

50 ஆயிரம் வீடுகள்

கடந்த கால போர்ச் சூழல், சுனாமி அனர்த்தம் காரணமாக அழிவடைந்த வீடுகளுக்குப் பதிலாக வீட்டு வசதி அளிக்கும் நடவடிக்கையும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 5 வருடம் காலத்தினுள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய வெற்றியாகும். இந்த வீடமைப்பு திட்டங்களுக்கு சுமார் 26 ஆயிரம் மில்லியன் ரூபா வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளும் கிழக்கில் குறிப்பாக மட்டு மாவட்டத்தில் மெச்சத்தக்க வளர்ச்சியை எட்டி வருகிறது. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பன முன்னேற்றப்பட்டு வரும் அதேவேளை இவற்றினூடாக மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கவும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது. தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் மட்டு மாவட்டத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்காக முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்துத் தெரிவித்தார்.

மட்டு மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான விதவைகள் இருப்பதாக யாராவது கூறினால் நம்ப முடியுமா. ஆனால் இந்த கசப்பான உண்மையை எற்கத்தான் வேண்டும். கணவன் இறந்ததாலும் யுத்தத்தில் பலியானதாலும் இங்கு அதிகளவு விதவைகள் காணப்படுகின்றனர். இவர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படாமல் இல்லை. இவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புக்கள், தொழிற் பயிற்சிகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்கள் எம்.பிக்கள் போன்றே —— மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்னின்று செயற்படுபவர்களின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் முக்கிய பங்குள்ளது.

மோசமான பின்னடைவை சந்தித்திருந்த கிழக்கு மாகாணம் இன்று தலை நிமிர்ந்து நிற்பதாக கூறும் அவர், கல்வித் துறை மேம்பாடு வறுமை ஒழிப்பு, வீட்டு வசதி அளிப்பது என்பவற்றுக்கு எதிர்காலத்தில் முன்னுரிமை அளிக்க இருப்பதாக குறிப்பிடுகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னேற்றத்தில் பங்காற்றி வரும் மாவட்ட செயலாளர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ¤ம் மட்டு அபிவிருத்தி குறித்து எமக்கு எடுத்துக் கூறினார்.

மஹிந்த சிந்தனையின் கீழ் வட கிழக்கில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக மூவின மக்கள் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இங்கு பிரதான பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணப்பட்டுள்ளது. உன்னிச்சைக்குள நீர்ப்பாசன திட்டத்தின் காரணமாக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் என்றார் அவர்.

அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறையும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் பாசிக்குடா கடற்கரை நிறைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காக மேலும் 900 ஹோட்டல் அறைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டுத் துறை மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். வெபர் விளையாட்டு மைதானத்தை 325 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 18 மாத காலத்தினுள் சகல வசதிகளுடன் கூடிய விளையாடடு மைதானம் தயாராகிவிடும்.

மொத்தத்தில் நாட்டின் முன்மாதிரி மாவட்டமாக மட்டு. மாவட்டம் மிளிரும் நாள் வெகு தூரமில்லை. அனைத்து வளங்களும் நிறைந்த மீன் பாடும் தேன் நாடு சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு சாதனை படைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அந்தப் பெருமை அரசியல் தலைமைகள், அரச நிர்வாகத்தினர் மட்டுமன்றி பொதுமக்களையும் சாரும்.

–தினகரன்

 

 

 

Published by

Leave a comment