SLMC-அஸாட் சாலி உறவு:காங்கிரஸ் போராளிகள் மனக்குமுறல்; ஆதரவாளர்கள் கொதிப்பு

அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுவதென இறுதி நேரத்தில் மேற்கொண்ட முடிவு அரசியல் வட்டாரத்தில் விறுவிறுப்பாகப் பேசப்படும் இந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அஸாத் சாலிக்கு இடம் வழங்கப்பட்டமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸின் தொண்டர்கள் மத்தியிலும் பாரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தூண்களில் ஒருவராக தன்னை இனங்காட்டி வந்த அஸாத் சாலி அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் வெளியேறி பின்னாளில் அரசாங்கத்துடன் கை கோத்தார்.

வெற்றிலைச் சின்னத்தின் மூலம் கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் நுழையலாம் என்ற அவரின் கனவு பலிக்காத நிலையில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போதும் மாநகரசபையை ஐ.தே.க கைப்பற்றியதனால் அவரின் மாநகர முதல்வர் கனவு கலைந்தது. எனினும் குறைந்தது எதிர்க்கட்சித் தலைவர் பதவி அல்லது பிரதி எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்குமென்ற அவரின் நப்பாசையும் கை கூடாமற் போனபோதும் மாநகரசபையில் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொண்டும், முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் செயற்பட்டு வந்தார்.

அரசியல் வானில் தன்னை ஒரு முஸ்லிம் பற்றுள்ளவராக காட்டிய அவர், அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி முஸ்லிம் அரசியல்வாதிகளை கடுமையாக தேவையற்ற முறையில் விமர்சித்தும் வந்தவர். முஸ்லிம்களின் காவலனாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட அசாத் சாலி, கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் அடிக்கடி அறிக்கைகள் மூலமும், தொலைக்காட்சிகளில், வானொலிகளில் குரல் வழியாகவும் முஸ்லிம் தலைமைகளின் ஒற்றுமை பற்றி பேசி வந்தமை தெரிந்ததே.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மிகவும் உச்சத்தில் வைத்து தாம் நேசிப்பதாகவும் முஸ்லிம்களின் காவலனாக தாம் அவரை அடையாளம் காணுவதாகவும் புகழாரம் சூடி வந்த அஸாத் சாலி காரணம் எதுவுமே இல்லாது திடீரென பல்டி அடித்தார். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகவும் முஸ்லிம்களின் அபிலாசைகளை அது நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தெரிவித்து மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக ஒரு குண்டைப் போட்டார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி அவர்களை மிகவும் மோசமாக விமர்சித்தார்.

தமிழ் பேசும் முன்னணியொன்றை உருவாக்கி கிழக்கில் போட்டியிடப் போவதாக திடீர் அறிவிப்புச் செய்தார். எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்ததை யடுத்து அக்கட்சியுடன் திடீரென தன்னை இணைத்துக் கொண்டு தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் பட்டியலில் அவர் போட்டியிடுவது, மக்கள் மத்தியில் இப்போது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

கிழக்குடன் எந்தத் தொடர்புமற்ற, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் எந்தவிதமான பங்களிப்பும் செய்யாத அஸாத் சாலிக்கு போட்டியிட மு.கா இடம் வழங்கியமை புரியாத புதிராகவேயுள்ளது. இரத்தத்தினாலும் வியர்வையினாலும் முஸ்லிம் காங்கிரஸை வளர்த்த கட்சித் தொண்டர்கள் இந்த செயற்பாட்டால் இடிந்து போயுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸின் தொண்டர் ஒருவருக்கு இந்த சந்தர்ப்பத்தை கட்சியின் உயர்பீடம் வழங்கியிருந்தால் சிறப்பானது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இதேவேளை, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அரசுடனான நல்லுறவு தொடரும் எனவும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். அரசின் இணக்கத்துடனேயே இந்த முடிவை கட்சி மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு இனவாதத்துடன் செயற்படுவதால் தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாகக் கூறும் அஸாத் சாலி, கிழக்கு மாகா ணத்தில் அரசின் பங்காளிக் கட்சியான மு.கா சார்பில் போட்டியிடுகின்றார். கிழக்குத் தேர்தல் களத்தில் அரசுக்கு விரோதமான கருத்துக்களை தெரிவித்து அவர் வாக்குக் கேட்கும் சந்தர்ப்பத்தில் மு.காவுக்கும் அரசுக்குமிடையேயான நல்லுறவு பாதிக்கப்படாதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ¥க்கும் அரசுக்கும் இடையிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே அஸாத் சாலி மு.காவில் தடம்பதிக்கப்பட் டுள்ளார் என்ற அச்சமும் கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற ஒரு கட்சி, இவ்வாறானவர்களை கட்சிக்குள் உள்வாங்குவதன் அர்த்தம் தான் என்ன? என்ற வினா எழுப்பப்பட் டுள்ளது. கொழும்பில் பிறந்து கொழும்பில் வளர்ந்து, கொழும்பில் அரசியல் செய்யும் அஸாத் சாலி, திடீரென கிழக்கு அரசியலில் நாட்டம் கொண்டமை எம்.பி ஆசை நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை மாகாணசபை உறுப்பினர் ஆகவாவது வந்துவிடலாம் என்ற எண்ணம்தான்.

1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் கல்விக்கு உயிரூட்டிய கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டமையையும் சிலர் ஞாபகமூட்டு கின்றனர்.

கலாநிதி பதியுதீனுக்கே அந்த நிலை என்றால் மாநகரசபை உறுப் பினர் அஸாத் சாலி எம்மாத்திரம் என்று புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டனர்.

கிழக்குத் தேர்தலில் போட்டியிடும் அஸாத் சாலி கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து இன்னும் உத்தியோகபூர்வமாக ராஜினாமாச் செய்யாமல் இருப்பதன் மர்மம் தான் என்னவென்றும் அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஒருவேளை கிழக்கு தேர்தலில் அவர் தோற்க நேரி டின் தனது கொள்கையை மாற்றிக் கொண்டு மீண்டும் வந்து மாநகரசபையில் அமர்ந்து விடுவாரா? வெற்றிபெற்றால் மு.கா அரசுடன் இணைவது நிச்சயம் என்பதால் இவர் தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்காக போராடுவதாக அறிக்கை விடுவாரா? காலந்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

–தினகரன்

 

 

 

Published by

Leave a comment