முஸ்லிம் முதலமைச்சர் எனும் விடயம் பாரிய பிரச்சினையல்ல
பதவிகளில் தங்கியிருக்கும் அவசியம் எமக்கில்லை என்கிறார் ஹக்கீம்
முஸ்லிம் முதலமைச்சர் எனும் விடயம் ஒரு பாரிய பிரச்சினையில்லை. இதனை பூதாகரமாக்க சிலர் முயற்சி செய் கின்றனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இது தொடர்பில் எமது கட்சியை சேர்ந்த சிலரும் கருத்து வெளிட்டனர். இதனை பெரிதாக தூக்கி பிடித்து அரசியல் பிரச்சினையாக்க நான் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பதவிகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு இல்லை. ஆனால் சில கட்சிகள் பதவிகளில் இருந்தால் மாத்திரமே கட்சியை வளர்க்க முடியும். பதவிகளை கொண்டு கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு இல்லை. எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க ஒருபோதும் நாம் தயாரில்லை. மக்களின் ஆணையை வைத்து கிழக்கு முஸ்லிம்களின் உரிமையை வென்றெடுப்போம் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார். கிழக்கு மாகண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஒரு மூஸ்லிம் முதலமைச்சரை பெற முடியுமா என ஊடகவியலாளரொருவர் இதன் போது வினவியதற்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதியுயர் பீடம் மாத்திரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானிக்கும் சக்தியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதை கிழக்கு முஸ்லிம்கள் வரவேற்கின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கிழக்கு மாகாண சபை தேர்தலில் இணைந்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட இழுபறி நிலையினை அடுத்து தனித்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் மேலும் கருத்து கூற மறுத்தார் அமைச்சர் ஹக்கீம். தனித்து போட்டியிட மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் எமது கட்சிக்கு அரசாங்கத்திலிருந்து எந்த அச்சுறுத்தலு மில்லை. அரசாங்கத்தின் ஒரு பிரிவாகவே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது என்றார்.
தேர்தல் முடிவின் பின்னர் நாம் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தால் அரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கே நாம் முன்னுரிமை வழங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். நாம் தனித்துப் போட்டியிடுவதால் கிழக்குத்தேர்தல் களம் சுவாரஷ்யமாக மாறிவிட்டது என்றார் அவர்.
-thinakaran
Leave a comment