கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழிவிட்டுச் செயற்படத் தயார்! ஹக்கீம் அதிரடி அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறியுள்ளது. எனவே, கிழக்கில் கூட்டமைப்பினர் அதிக ஆசனங்களைக் கைப்பற்றினால்…

…அவர்களுக்கு வழிவிட்டு செயற்பட நாம் தயாராகவுள்ளோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிழக்குத் தேர்தலில் எமது அரசியல் பலத்தைக் காண்பிப்பதற்காகவே நாம் தனித்துக் களமிறங்கியுள்ளோம். இதனால் அத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து கிழக்குத் தேர்தலில் களமிறங்குவது குறித்து சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்திருந்தால் நாம் அது தொடர்பில் சாதகமானதொரு தீர்மானத்தை எடுத்திருப்போம் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடந்த இருவார காலமாக நாம் மிகவும் ஆழமாக ஆராய்ந்தோம். கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரு மாற்றுவழிகள் தொடர்பில் கலந்துரையாடினோம்.

முதலாவது, அரசின் பங்காளிக் கட்சியாகவே இருந்து அதனுடன் இணைந்து போட்டியிட்டு எமக்குக் கிடைக்கும் ஆசனங்களுக்கேற்ப ஆட்சி அமைப்பது. இரண்டாவது, தனியாகப் போட்டியிட்டு எமது அரசியல் பலத்தைக் காண்பித்து கிடைக்கும் ஆசனங்களுக்கேற்ப அரசுடன் இணைந்து செயற்படுவது.

இந்த இரண்டு தீர்மானங்களிலும் முதலாவது தீர்மானம் குறித்து கடந்த இருவார காலமாக எமது கட்சி உயர்பீடம் அரசுடன் இணைந்து மிகவும் ஆழமாகவும் தீவிரமாகவும் பேச்சு நடத்தியது. அரசுடன் இணைந்து போட்டியிடுவதால் எமக்குரிய இட ஒதுக்கீட்டை அரசின் வேட்பாளர் பட்டியலில் வழங்கவேண்டும்.

இதனடிப்படையில் நாம் அரசுடன் இணைந்து நடத்திய பேச்சுகள் சாதகமாக முடியவில்லை. இதன் பின்னரே தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்துத் தீர்மானித்தோம்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோமே தவிர, அரசுக்கும் எமக்கும் இடையிலான உறவில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை. தேர்தலின் பின்னர் மறுபடியும் அரசுடன் இணைந்தே செயற்படுவோம். அதற்கு எமது ஒத்துழைப்பை வழங்குவோம்.

அரசிலுள்ள பங்காளிக் கட்சி என்ற வகையிலும், அரசில் ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சுப் பதவியில் உள்ளேன் என்ற வகையிலும் எனது கட்சிக்கும், எனக்கும் சில தார்மீக பொறுப்புகள் இருக்கின்றன. அதற்கேற்ற வகையிலே செயற்பட முடியும்.

எந்த விடயத்திலும் நான் தனித்து எதையுமே செய்யமுடியாது. எமது கட்சிக்கும் அரசியல் அந்தஸ்துக்கும் எதுவித பங்கமும் ஏற்படாத வகையிலேயே முடிவெடுத்திருக்கிறோம். கிழக்குத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடுவதால் அத் தேர்தலைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக மாறியுள்ளோம்.

இரு தரப்புகளுக்குமிடையே ஏற்பட்ட பேச்சுகளில் சாத்தியமற்ற தன்மை காணப்பட்டதால் கிழக்கில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை நாம் எடுத்தோம். இந்தத் தீர்மானம் எடுத்தபின்னர் 24 மணி நேரத்துக்குள் நான் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்தேன். இதற்காக பெரும் சிரமப்பட்டேன்.

வேட்பாளர் பட்டியல் தயாரித்த பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தேன்.

கிழக்குத் தேர்தல் விடயத்தில் எனது மனச்சாட்சிக்கு உண்மையாகவே முடிவுகளை எடுத்தேன். தனியாகப் போட்டியிடுவது என நாம் அறிவித்த பின்னர் கட்சி ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதி நேரத்தில் நாம் எடுத்த தீர்மானம்தான் மக்களின் ஏகமனதான தீர்மானமாக அமைந்தது.

கிழக்குத் தேர்தலில் இம்முறை நாம் மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் போட்டியிடுகின்றனர். அவர்கள் கிழக்கில் அதிகமான ஆசனத்தைப் பெற்று வெற்றிபெற்றால் இன நல்லிணக்கத்தைக் கருதி நாம் அவர்களுக்கு வழிவிட்டுச் செயற்படுவோம் என்றார்.

-tamilwin

 

 

 

Published by

Leave a comment