இன்று மாலை நாட்டின் பல பாகங்களிலும் ரமழான் மாத பிறை தென்பட்டதால், கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை முஸ்லீம்கள் நாளை சனிக்கிழமை புனித ரமழான் நோன்பை நோற்கின்றனர்.
காத்தான்குடியில் கூடுதலாக சிறுவர் குர்ஆன் மத்ரஸாக்களிலும், சில பள்ளிவாயல்களிலும் மற்றும் குறிப்பிட்ட இல்லங்களிலும் பெண்களுக்கான தறாவீஹ் தொழுகைகள் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஒரு சில ரமழானில் முகைதீன் மெத்தைப் பள்ளிவாயலிலும் பெண்களுக்கான தொழுகைகள் இடம்பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலிலும் முதன் முறையாக பெண்களுக்கான தறாவீஹ் தொழுகைகள் இம்முறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகளவான பெண்கள் ஆர்வத்துடன் இத்தொழுகைக்கு வந்துள்ளதாக பள்ளிவாயல் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
கடந்த காலங்களில் இப்பகுதியில் சித்தீக்கிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியிலும், குறிப்பிட்ட சில இல்லங்களிலும் பெண்களுக்கான தொழுகைகள் இடம்பெற்று வந்தன. தற்பொழுது இப்பள்ளிவாயல் ஏற்பாடு செய்துள்ள பெண்களுக்கான தொழுகையில் நிச்சயமாக பெண்கள் பயனடைவர். சிறந்த ஹாபிஸ்களைக் கொன்டு அழகிய கிறாஅத்துடன் ஓதப்படும் அல் குர்ஆன் வசனங்களைக் கேட்பதற்கு இவர்களுக்கு வழிவகுக்கும்.
சென்ற வருடம் ‘கிறீஸ்’ மனிதன் எனும் புரட்சி இலங்கையில் ஏற்பட்டு, பல பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். எமது ஊரிலும் பல பெண்கள் தறாவீஹ் தொழுகைக்கு செல்லமுடியாத பரிதாப நிலைக்கு ஆளாகி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment