கானல் நீராய்ப்போன விளையாட்டு மைதானக் கனவு!

-MMS

காத்தான்குடி மத்தியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்காக துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கு அரசாங்கம் பல கோடி ரூபாய்களை வழங்கியிருந்தது.

இதற்கிணங்க, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நேரடி பார்வையின் மூலம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இம்மைதானம் மீள் நிர்மானம் செய்யப்பட்டு, அபிவிருத்தியும் செய்யப்பட்டு வந்தது. எமது இணையத்தளத்தில் மேற்படி அபிவிருத்தி பற்றிய ஓர் திட்டமான ஆக்கத்தினை வெளியிட்டிருந்தோம்.

மைதானம் (நிலம்) தோண்டப்பட்டு, வளப்படுத்தப்பட்டு, பழைய பார்வையாளர் அரங்கு உடைக்கப்பட்டு இம் மைதானம் சிறந்த அபிவிருத்தியில் திளைத்திருந்தது. இடப்பற்றாக்குறை காரணமாக இம்மமைதானத்தை சர்வதேச ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கோ, மீள்நிர்மானம் செய்வதற்கோ முடியாது!

ஏனெனில் சர்வதே ரீதியில் ஓர் மைதானத்தை அமைப்பதற்கு பல வரையறைகள் உள்ளன. எனினும் மாவட்டத்தில் அல்லது கிழக்கிழங்கையில் ஓர் முன்மாதிரியாக ஹிஸ்புல்லாஹ் மைதானத்தை அமைக்கும் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட இவ் அபிவிருத்தி தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது!

இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பல கோடி ரூபாய்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரைக்கும் தெரியாது! இம் மைதான அபிவிருத்திக்காக தருவிக்கப்பட்டிருந்த கட்டுமானப்பொருட்களும் இதரப் பொருட்களும் தற்பொழுது தமிழ் பகுதி ஒன்றின் அபிவிருத்திக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன அல்லது கடத்தப்பட்டிருக்கின்றன.

காத்தான்குடி விளையாட்டு வீரர்களினரதும், விளையாட்டு இரசிகர்களினரதும் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த இம் மைதானக் கனவு, இன்று இம்மைதானத்துக்குள் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது.

இப்பகுதியில் இருந்த மேற்படி பொருட்களை எடுத்துச் செல்லும் போது கட்டுமானப்பனிகளில் ஈடுபட்டவர்களிடம் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். பதில் ஏதும் கிடைக்கவில்லை! இம்மைதான அபிவிருத்தி மேலும் மற்றுமொரு ஊழலில் முடியப் போகின்றதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

ஓரு மைதான அபிவிருத்திக்காக நிதி, திட்டமிடப்படாதவரைக்கும் வழங்கப்படுவதில்லை! அவை பொறியிலாளர்களின் உதவிகளுடன் திட்டமிட்ட பின்பு, சாதக பாதக அறிக்கைகளின் பின்பே நிதி ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இம்மைதான அபிவிருத்தியில்  ஒன்றுக்கு முரணான பல கருத்துக்கள் மேற்படி அபிவிருத்தியை மேற்கொண்டவர்களால் இப்போது தெரிவிக்கப்படுகிறது. நிதி போதாது எனவும், இம்மைதானம் ஓர் தேசிய மைதானத்துக்குரிய பௌதீக் சூழலை கொன்டமைந்ததாக இல்லை எனவும் கூறி மழுப்பப்படுகின்றது அல்லது மறைக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந்நேரத்திலும், புனித ரமழானில் மக்கள் திளைத்திருக்கும் இத்தருணத்திலும் வியாபாரத்தில் மூழ்கியிருக்கும் இந்நாட்களிலும் இம்மைதான அபிவிருத்தியை மக்கள் மறந்திருப்பர் என நினைத்து, ஹிஸ்புல்லாஹ் மைதான அபிவிருத்தி இடை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

இம்மைதான அபிவிருத்தியில் பங்கெடுத்து முழுமூச்சாக களத்தில் இறங்கி செயல்பட்ட மதிப்புக்குரிய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள்தான் இம்மைதான அபிவிருத்தியின் இடைநிறுத்தத்திற்கு சரியான பதிலைத் தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

 

 

 

Published by

Leave a comment