மூன்று மாகாண சபைகளுக்கும் செப். 8 இல் தேர்தல்: 114 உறுப்பினர்களை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி(விரிவான தகவல்கள்)

2 கட்சிகள்,

2 சுயேச்சைகளின்

மனுக்கள் நிராகரிப்பு

கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 27ம் திகதி கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 12ம் திகதி முதல் நேற்று 19ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன

பிரதான கட்சிகளான ஐ.ம.சு. மு, ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஜே. வி. பி. ஆகியன நேற்றுக் காலையே சில மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன.

இதன்படி மூன்று மாகாண சபைகளுக்கும் கட்சிகள் சார்பில் 89 மனுக்களும் 86 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவுபெற்றதும் ஆட்சேபனை நேரம் ஒதுக்கப்பட்டது. இதன்போது தேர்தல் விதிமுறைகளுக்கு இணங்க பூர்த்தி செய்யப்படாத இரு கட்சிகளினதும் இரு சுயேச்சைகளினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்த தேர்தல்

தெரிவத்தாட்சி அதிகாரி “எக்சத் லங்கா பெரமுன” என்ற கட்சியின் வேட்பு மனுவை நிராகரித்தார். இதேபோல, இரத்தினபுரி மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கலில் ஜனசெத பெரமுன என்ற கட்சியின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேவேளை, கேகாலை, அம்பாறை மாவட்டங்களில் இரு சுயேச்சைக் குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக நமது பிராந்திய நிருபர்கள் தெரிவித்தனர்.

மூன்று மாகாண சபைகளிலுமுள்ள ஏழு மாவட்டங்களுக்குமான முதன்மை வேட்பாளர்களும் கட்சிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு. மு. முதன்மை வேட்பாளர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக கே. துரை ராஜசிங்கம், முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக ஹாபீஸ் நkர் அஹமட்டும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. சார்பில் முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், ஸ்ரீல. மு. கா. சார்பில் ஆர். எம். அன்வர், இலங்கை தமிழரசுக் கட்சியில் எஸ். தண்டாயுதபாணி, ஐ.தே.க சார்பில் அப்துல்லா முஹமட் மஹ்ரூப் ஆகியோர் முதன்மை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு. மு. வின் முதன்மை வேட்பாளராக அத்துலகுமார ராகுபத்தவும், ஐ.தே. கவுக்கு ஏ.ஏ. விஜேதுங்க, ஜே.வி.பிக்கு ஏ. எம். புஸ்பகுமார திஸாநாயக்க, இ. தொ. கா கணபதி இராமச்சந்திரன் ஆகியோர் முதன்மை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அமபாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளர்களாக ஐ.ம.சு. மு.வுக்கும் விமலவீர திஸாநாயக்க, தமிழரசுக் கட்சிக்கு குலசேகரம் ஹென்றி மகேந்திரன், ஸ்ரீல. மு. காவுக்கு அப்துல் மஜீத், ஐ.தே.க. வுக்கு தயா தர்மபால கமகே ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 கட்சிகளும் 21 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 18 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன.

திருமலை மாவட்டத்தில்

16 கட்சிகள் 16 சுயேச்சைகள்

அநுராதபுரம் மாவட்டத்தில்

9 கட்சிகளும், 5 சுயேச்சைகளும் போட்டி

பொலன்னறுவை மாவட்டத்தில்

9 கட்சிகள், 7 சுயேச்சைகள் போட்டி

இரத்தினபுரி மாவட்டத்தில்

13 கட்சிகள் 6 சுயேச்சைகள் போட்டி

கேகாலை மாவட்டத்தில்

13 கட்சிகள் 13 சுயேச்சைகள் போட்டியிடுகின்றன.

தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி:

கட்சிகள் சார்பில் 89 வேட்பு மனுக்களும் சுயேச்சைகள் சார்பில் 86 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மூன்று மாகாண சபைகளிலும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

(மாவட்ட ரீதியில்)

மட்டக்களப்பு- 11

அம்பாறை- 14

திருமலை- 10

மொத்தம் 35+2 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை மாவட்டம் -18

இரத்தினபுரி – 24

தெரிவாகும் மொத்த உறுப்பினர்- 42+2

வட மத்திய மாகாணம்

அநுராதபுரம் மாவட்டம் -21

பொலன்னறுவை – 10

தெரிவாகும் உறுப்பினர் – 31+2

மேற்குறிப்பிட்டுள்ள உறுப்பினர்களது மொத்த எண்ணிக்கைகளோடு போனஸ் ஆசனங்கள் இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி நாளாகிய நேற்று தேர்தல் நடைபெறவுள்ள ஏழு மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன. மாவட்ட கச்சேரிகள் தோறும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, மேற்படி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரங்கள், ஊர்வலங்கள் எதுவும் முன்னெடுக்கப்படக் கூடாதென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஏற்கனவே அறிவிப்பு விடுத்திருந்தார்.

இருந்தபோதிலும் சில இடங்களில் பிரசாரம் முன்னெடுப்பு மற்றும் கடவுட், போஸ்டர்கள் பாவனை காரணமாக தமக்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி கூறினார்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment