கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் ஏற்பு இன்று நண்பகலுடன் நிறைவு பெறுகிறது. கட்டுப்பணம் செலுத்துவது நேற்று நண்பகலுடன் நிறைவு பெற்றது.
பிரதான கட்சிகளான ஐ. ம. சு.மு, ஐ. தே. க, ஜே. வி. பி ஆகியன நேற்று நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. சப்ரகமுவ மாகாண சபைக்கான தேர்தலில் ஐ.ம.சு.
மு. நேற்று கேகாலை மாவட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. அதேநேரம், பொலநறுவை மாவட்டத்தில் ஜே.வி.பியும் அநுராதபுரம் மாவட்டத்தில் ஐ.தே. கவும் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன.
12ம் திகதி முதல் 19ம் திகதிவரை வேட்பு மனுக்கள் ஏற்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார். இதற்கமைய, வேட்புமனுக்களை ஏற்பது இன்று நண்பகலுடன் நிறைவடைகிறது.
ஐ.ம.சு.மு, ஐ.தே.க, ஜே. வி.பி. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பிரதான கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக் குழுக்களும், இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலைப் பூர்த்தி செய்வதில் நேற்று மிகவும் பரபரப்புடன் செயற்பட்டது. மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதாக கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்பட்டதையடுத்து இந்தபரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.
தமிழ்த், தேசிய கூட்டமைப்பும் நேற்று வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்ய முடியாத தடுமாற்ற நிலையில் இருந்ததை அறியக் கூடியதாக உள்ளது. பிரதான எதிர்க் கட்சியான ஐ. தே. க. உட்கட்சி மோதலால் வேட்பாளர் பட்டியலைப் பூர்த்தி செய்வதில் நேற்று வரை பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.
ஆயினும், கடைசி நேரப் பரபரப்புடன் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளன.
இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,47, 099 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 11 உறுப்பினர்களைத்தெரிவு செய்வதற்காக 14 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 4,41,787 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 285 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 10 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 7,69,813 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 623 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 24 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 27 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கேகாலை மாவட்டத்தில் 6,31981 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 464 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 14 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 17 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 2,45,363 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 566 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 21 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளன. அனுராதபுரம் மாவட்டத்தில் 6,06,507 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 608 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 21 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 24 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
பொலநறுவை மாவட்டத்தில் 2,94,265 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 287 வாக்களிப்பு நிலையங்களில் 10 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
ஒவ்வொரு மாகாணங்களிலும் வெற்றிபெறும் கட்சிகளுக்கு தலா இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.
கேகாலை மாவட்டம்
சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் கேகாலை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் நேற்று (18) வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
கேகாலை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் குழுவின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான மஹிபால ஹேரத் தலைமையில் கேகாலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி துஷித்த பீ. வனிகசிங்க முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டன.
மேற்படி கேகாலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை குழுவின் தலைவர் மஹிபால ஹேரத் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளித்தார்.
கேகாலை மாவட்டத்தில் இருந்து ஐ.ம.சு முன்னணியில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில் 18 பேர் மட்டுமே சப்ரகமுவ மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவர்.
மேற்படி நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன, பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான வை. ஜீ. பத்மசிறி, கனக ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (18) ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே. வி. பி) வேட்பு மனுவில் தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முதன்மை வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக முதன்மை வேட்பாளர் வேட்பு மனுவை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சுனில் கன்னங்கர முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஐக்கிய தேசிய கட்சி வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை ஜே.வி.பி. சார்பாக அதன் முதன்மை வேட்பாளர் புஸ்பகுமார திசாநாயக்க வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்தவேனை தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டச் செயலர் முன்றலில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
அத்துலகுமார ராகுபத்த, ரஞ்சித் பண்டார, வருண பிரியந்த லியனகே, சலித்த கருணாரத்ன, அகில சாலிய எல்லாவெல, இந்துநில் ராஜபக்ஷ, தர்மசிறி தயாபத்திரன, சாமின்தகே வித்தானகே, ஜயதிஸ்ஸ ரணவீர, அருண. நிலந்த ஜயசிங்க, டி.ஜீ. கருணாசேன, ஜீ. எம். ஜயசுந்தர, ஜீ. கருணாபால, கே.வி. ஏ. சந்திரசிறி, எம். எல். நமிந்த அனுரசிறி, அனுர அலகியவன்ன, அசோக ஜயவர்தன, தீபால் குணசேகர, ஏ. ஏ. எம். இஸ்மத், உபாலி வீரசிங்க, ஏ. எஸ். விஜயகுமாரன், பானு முனிப்பிரிய, பிரியந்த பண்டார, ரம்ய குமாரவீரசிங்க, எஸ். எல். காமினி ஜயதிலக்க, காஞ்சன ஜயரட்ன, பிரபாத் டி அல்விஸ்.
-தினகரன்
Leave a comment