உடன்படிக்கையில் கைச்சாத்திட ஹசன் அலி தொடர்ந்தும் மறுப்பு! ரவூப் ஹக்கீம் தடுமாற்றம்!!

அம்பாறையில் முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டம் மற்றும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்குத் தமிழ் பேசும் அரச அதிபர்கள் நியமனம் ஆகிய இரண்டு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றுக் காலை கூடியபோது தனது இந்த நிலைப்பாட்டைக் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தியுள்ள ஹசன் அலி, மேற்படி இரு விடயங்களையும் அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வேறு ஒருவரை வைத்துக் கைச்சாத்திட்டுக்கொள்ளுமாறும் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் கொள்கையாகக் கொண்டிருந்த மேற்கண்ட இரு விடயங்களையும் நிறைவேற்றக் கோருவதில் எதுவித தவறுமில்லையென்றும், இதற்கு மேலாகச் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு முஸ்லிம் சமூகத்திற்கே துரோகமிழைக்க விரும்பவில்லையென்றும் ஹசன் அலி இந்தக் கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம், அரசுடன் இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், முஸ்லிம் மக்களின் உரிமைகள் குறித்தான கட்சியின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த ஆதரவு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் மு.கா. உயர்பீடம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளையில் கட்சியின் செயலாளர் ஹசன் அலி எடுத்துள்ள நிலைப்பாடு கட்சித் தலைவர் ஹக்கீமுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. கட்சியின் செயலாளர் நாயகம் என்ற முறையில் ஹசன் அலியே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டியவர் என்பதனால் ஹக்கீம் பெரும் குழப்பமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

-Tamilwin

 

 

 

Published by

Leave a comment