கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரவோடு இரவாக ஆசனம் குறைப்பு

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்படுவதாக கூறப்பட்ட 12 ஆசனங்க்களில் ஒன்று இரவோடு இரவாக குறைக்கப்பட்டிருக்கிறது.

நேற்று திங்கட்கிழமை இரவு அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பின் போதே நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் அதாவுல்லா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையில் வேட்பாளர் பங்கீடு சர்ச்சை தொடர்பாக ஆராயப்பட்டு சில முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

இதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 11 வேட்பாளர்களும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பொதுவாக 8 வேட்பாளர்களும் ஒதுக்கப்படுவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அறிவித்தார்.

இந்த முடிவின்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தலா 3 வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவர்.

அத்துடன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் பொதுவாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 2 வேட்பாளர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவர்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முஸ்லிம் வேட்பாளர் என்ற அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா மற்றும் நஜீப் ஏ.மஜீத் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்படுகின்றது.

இந்த ஆசன ஒதுக்கீடு முறைமை அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் றிசாத பதியுதீன் ஆகியோருக்கு ஓரளவு திருப்தியளித்துள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஒதுக்கீட்டில் திருப்தியில்லை என்றாலும் அதன் தலைவரான அமைச்சர் ஹக்கீம் நேற்று இரவு நடந்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனான சந்திப்பில் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கட்சிக்குள் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக மு.கா. முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இது முதல் வெட்டு என்றும் இது போன்று இன்னும் பல வெட்டுக்குத்துகள் – கழுத்தறுப்புகள் இடம்பெறும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

-adaderana

Published by

Leave a comment