எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரச உடைமைகளை பாவிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பான சுற்றறிக்கையை உள்ளுராட்சி மன்ற தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி கிழக்கு -வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி எதிர் கட்சி மற்றும் சுயேட்சை குழுவில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களை- வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாவிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க அலுவலகங்களில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதும் -கட்அவுட்களை காட்சிக்கு வைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே அரசாங்க அதிகாரிகள் அலுவலக நேரங்களிலும் ஏனைய நேரங்களிலும் தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபடுவதும் இந்த சுற்றறிக்கையின் படி தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான விளையாட்டு மைதானங்களை தேர்தல் பிரசார கூட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் போது அதில் கட்சி பேதம் பாராது சகல வேட்பாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமெனவும் தேர்தல் ஆணையாளர் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
-அரசாங்க தகவல் ஊடகம்
Leave a comment