மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தாங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு மறைப்பது ஏன்?

சிந்தனைக்கான ஓர் அலசல்

‘உரிமைகள் என்பது சமூகங்கள் சார்ந்தது. எனவே சமூகங்களின் உரிமைகள் பற்றி ஒப்பந்தம் செய்தால் அது மறைக்கப்படக் கூடாது. அப்படி மறைக்கப்பட்டு மூடிய ஒரு தனி  அறைக்குள் இடம்பெற்றால் அது நிச்சயமாக சமூகம் சார்ந்த பேச்சாகவோ அல்லது உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கான நிபந்தனைகளாகவோ இருக்காது’.

-MJ

தேர்தல்காலம்! சூடுபிடித்து, தற்பொழுது அதற்கான ஆயத்தங்களும் இடம்பெற்றுவருகின்றன. தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் ஓர் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுக்கவே தாங்கள் பாராளுமன்றம் செல்வதாக் கூறியே மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வர். ஆனால் இவ்வாறான உரிமைகள் எவை?  என்பதே இவர்களுக்குத் தெரியாது! இதேபோல் கூட்டத்தைக் கேட்டுக்கொன்டிருக்கும் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூடத்தெரியாது.

இப்படியே இலங்கை அரசியல் வராலாற்றில்; சிறுபான்மையினராக இருக்கும் நாங்கள் சமார் 60 வருடங்களாகக் காலங்களைக் கடத்தி வருகின்றோம்.

இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கான உரிமைகள் எவை? எத்தகைய உரிமைகளை நாங்கள் இதுவரை பெற்றிருக்கின்றோம். இன்னும் பெற இருப்பது அல்லது பெறவேண்டி உரிமைகள் எவை? என்பதை முதலில் பட்டியலிட வேண்டும். ஒவ்வொரு தேர்தல்களிலும் எந்தக் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதியானாலும் சரியே, உரிமைகளை வென்றெடுக்கவே எங்கள் உயிரை பணயம் வைப்பதாக மார்பு தட்டிக்கொன்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.

கூட்டத்தை இரசித்து வாய்பிளந்து பேச்சில் லயித்துப்போய் இருக்கும் மக்கள் யாராவது குறித்த வேட்பாளரை நோக்கி ‘எங்களுக்கான உரிமைகள் எவை? எத்தகைய உரிமைகளை நாங்கள் இன்னும் பெறவேண்டி இருக்கின்றது?’ என்பதாகக் கேட்டதாகச் சரித்திரம் கிடையாது. ‘செவிடன் காதில் ஊதிய சங்காகவே’ ஒவ்வொரு தேர்தல் மேடைகளும் இலக்குவைக்கப்படுகின்றன. இவை கட்சிகளுக்கிடையிலான ஆதரவுக் கூட்டமே தவிர, உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் உன்னதமான கூட்டமாக இருந்ததில்லை!. இறுதியில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் கைகலப்பிலுமே அதிகமான தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்திருப்பது கசப்பான உண்மை!

நிற்க!

உரிமைகள் எவை என்பன பற்றி எங்களுக்கே தெரியாது! இதற்கிடையில் எங்களது உரிமைகளைப் பெற்றுத்தருவதாகக்கூறி பாராளுமன்றம் சென்றவர்கள் தேர்தல்களின் போது ஆளும் அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்கின்றனர். இது முற்றும் முழுதாக ஓர் மறைவான ஒப்பந்தமாகவே நடைபெற்றுவருவது முஸ்லீம் சமூகம் மீது, தங்களை பாராளுமன்றம் அனுப்பிய மக்களின் கண்களுக்குள்  மண்ணை அள்ளி வீசுவதற்கு ஒப்பானதாக இருந்துவருகின்றன. அல்லது நாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றோம்!

‘சமுதாய உரிமைகளைப் பெற்றெடுக்க சில நிபந்தனைகளை தாங்கள் செய்துள்ளோம். அரசாங்கம் அதற்கு இணங்கியதாலேயே தாங்கள் இம்முறை அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட இருக்கிறோம்’ என்பதாக அன்றுமுதல் இன்றுவரை ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்கிவருகின்றனர். உண்மையில் யார் இவர்கள்? இவர்களது சொந்த புத்தியால், பலத்தால், பணத்தால் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக பிரதிபலிக்க முடியுமா?

இப்படி இருக்கையில், மக்களின் வாக்குகளை பிச்சையாக எடுத்து அதிகாரம் கிடைத்ததும், செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், தங்களைத் தெரிவுசெய்து நாடாளுமன்றம் அனுப்பிவைத்த மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைக்கப்படுவது ஏன்? ஒரு தேர்தலால் ஒரு மனிதன் எத்தனை சமூக விரோதங்களைச் சந்திக்கின்றான் என்பது கௌரவமிக்க அரசியல்வாதிகளுக்குப் புரிகின்றதா?

தனது குடும்பத்தில் முதலாவது பிளவு இந்தத் தேர்தல்களால் ஏற்படுகின்றது. அதன்பின்னர் உறவினர்கள், நண்பர்கள், பள்ளிவாயல்கள், வேலைத்தளங்கள்.. இப்படி ஏற்பட்ட பிளவுகள் மொத்தத்தில் ஊருக்குள் பகையை ஏற்படுத்தி ஓர் சமூக விரோதியாக சித்தரிக்கப்படுகின்றான். இறுதியில் குடும்பத்தில் சண்டை, திருமணத்தில் பிளவு, வேலைக்கு ஆப்பு! மொத்தத்தில் அவனது வாழ்க்கையே இழந்துவிடுகிறான். இத்தகைய ஓர்  தனிநபரின் நிலைமை அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை!

நாம் அறிந்தவகையில் 1988 ஜனாதிபதித் தேர்தலில் இருந்து முஸ்லிம் சமூகத்துக்கான ஓப்பந்தங்கள் இடம் பெற்று வருகின்றன. இந்நாட்டில் பெரும்பான்மையான இரு பிரதான கட்சிகள் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருவதால், தேர்தல்களில் குறித்த கட்சிகள் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மை இனத்தின் ஆதரவுகள் இன்றியமையாதது.

இதனால் அப்போது பெரும்பான்மை கட்சிகளை பின்தள்ளிவிட்டு, வடகிழக்கில் முஸ்லிம்களின் தனிக்கட்சியாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செல்வாக்குச் செலுத்தி வந்தது. இதனைக் கருத்திற்கொன்ட அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் திரு ரணசிங்க பிரேமதாச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச.எம். அஷ்ரப் அவர்களுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொள்கிறார்.

பின்னர் 1994 ஜனாதிபதித் தேர்தலில் பொ.ஐ.முன்னணியில் போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆகிய இருவருக்குமிடையில்  ஓர் ஒப்பந்தம் இடம் பெற்றிருந்தது. அது முஸ்லீம் சமூகத்துக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஒப்பந்தம் என கூறப்பட்டது.

முஸ்லீம் சமூகம் இந்நாட்டில் ஓர் உரிமையை களவாக அல்லது கொள்ளையிட்டு பெற்றெடுப்பது போல், மூடப்பட்ட ஓர் நட்சத்திர விடுதி அறைக்குள் இந்த ஒப்பந்தம் இடம்பெற்றிருந்தது. உரிமைகள் என்பது சமூகங்கள் சார்ந்தது. எனவே சமூகங்களின் உரிமைகள் பற்றி ஒப்பந்தம் செய்தால் அது மறைக்கப்படக் கூடாது. அப்படி மறைக்கப்பட்டு மூடிய தனி ஒரு அறைக்குள் இடம்பெற்றால் அது நிச்சயமாக சமூகம் சார்ந்த பேச்சாகவோ அல்லது உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கான நிபந்தனைகளாகவோ இருக்காது.

மாறாக தனக்குரிய இரகசியப் பேச்சுக்கள், தேவைகள் அல்லது தனிப்பட்ட விடயங்களே ஓர் மூடிய அறைக்குள் இடம்பெற்றிருக்கும். அப்போதைய பல சமூக ஆய்வாளர்கள் இவ் மூடிய அறை ஒப்பந்தத்தை பகிரங்கமாக எதிர்த்தனர். விமர்சித்தும் வந்தனர். எனினும் மக்களில் பலர் ஓர் எதிர்பார்ப்புடன் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதுவரைக்கும் கடலில் விழுந்த சில்லறைகளைப் போல் தேடுகிறோம். மூழ்கியும் பார்த்தோம். முடியவில்லை!

குறித்த ஒப்பந்தத்தின் பின்  இலங்கை முஸ்லீம்  மக்கள்  குறிப்பாக வட-கிழக்கு முஸ்லிம் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டனர். மாய வார்த்தைகளாலும், உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகவும் மக்களிடம் கூறி, பொ.ஐ.மு யை ஆதரிக்குமாறு கேட்டுக் கொன்டிருந்தனர். மக்களும் விழுந்து, விழுந்து ஆதரவு அளித்தனர். இறுதியில் வழமைபோல் எங்களை ஏமாற்றிச் சென்றனர். ஆனால் ஒப்பந்தப்படி எந்த உரிமைகளை நாங்கள் இதுவரை பெற்றுள்ளோம் என்பதை ஏமாந்த எங்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்க்க வேண்டும்.

ஒரு சமூகத்துக்கான ஒப்பந்தங்கள் மூடிய அறைக்குள் இரகசியமாக இடம்பெறுவது எனில், அது நிச்சயமாக ஒரு சமூகம் சார்ந்த கோரிக்கையாக இருக்க முடியாது. மாறாக தனக்குரிய கோரிக்கையாகவும் தனது நிகழ்கால, எதிர்கால அரசியல் இருப்புக்கான அல்லது பொருளீட்டலுக்கான கோரிக்கைகளாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!

உரிமைகள் பற்றி வாக்குக் கேட்பவர்களிடம் முதலில் எங்களுக்கான உரிமைகள் எவை என்பதை முதலில் கேளுங்கள்! அடுத்து ஒப்பந்தங்கள் இடம்பெற்றால் அவை வாக்களித்த மக்களுக்கு பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படவேண்டும். ஏனெனில் எங்கள் சமூகத்தில் இருந்து ஓர் தேர்தலில் வேட்பாளர்களாக இடம்பெறுபவர்கள் உரிமைகளைக் கையிலெடுத்தே முதன்முதலில் மேடைக்கு காலடி வைக்கின்றனர். அவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்த வேட்பாளராக இருந்தாலும் அல்லது பட்டம் பெற்ற அறிஞராக இருந்தாலும் இதே பல்லவிகளையே கூறி ஓர் சமூகத்தைத் திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றனர். பின்னர் இவர்களும் ஓர் மூடிய அறைக்குள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட ஒரு போதும் பின்வாங்கமாட்டார்கள் என்பதும் கடந்தகால உண்மைகள்!

இன்று சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஓர் ஒப்பந்தத்தை ஆளும் அரசாங்கத்துடன் செய்திருக்கின்றது. இவைகூட எங்களுக்குத் தெரியப் போவதில்லை! தேர்தல் மேடைகளிலும் நாங்கள் கேட்கப்போவதில்லை!

இதே போல் வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்களும் கடந்த காலங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு பல ஒப்பந்தக்களைச் செய்திருந்தனர். அவைகளும் தெரியவருவதில்லை. இப்படியே நாங்களும் தெரியாமலேயே இந்நாட்டில் இந்துவிட்டுப் போவோம் என்றே நாங்களும் இருக்கின்றோம்?

இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் கள்ளத்தனமாக குடியிருக்கவில்லை. அவர்கள் பரம்பறை பரம்பறையாக இந்நாட்டில் வாழ்ந்துவரும் ஓர் சமூகம். எனவே எங்கள் சமூகத்துக்கான உரிமைகள் பெறப்படும் போது அவை ஒழிவு மறைவின்றி பகிரங்கமாப் பெறப்பட வேண்டும்! அதனை பகிரங்கமாக இந்நாட்டில் முஸ்லிம்கள் பின்பற்றவேண்டும் என்பதே இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் எதிர்பார்க்கும் விடயமாகும்.

Published by

Leave a comment