பாலியல் ரீதியான வன்முறையை குறைக்க சிங்கள தொடர், வெளிநாட்டு படங்களை பார்க்க தடை விதிக்க வேண்டும்

-தினகரன்

நாடெங்கிலும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான வன்முறைகளைக் குறைக்க வேண்டுமாயின், இலங்கையில் உள்ள 8.2 மில்லியன் வயது வந்த ஆண்களும், பெண்களும் தங்கள் பிள்ளைகள் சிங்களத் தொடர் தொலைக்காட்சி நாடகங்களையும், வெளிநாட்டுப் படங்களையும் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்று தொழில் அமைச்சர் காமினி லொக்குகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் உள்ளூர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகங்களின் இயக்குநர்களுக்கு கொடுத்துள்ள அறிவுரையில் திரைப்பட நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடிய வகையில் தரமற்ற திரைப்படங்களைத் தயாரிக்காது இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிலையத்தினால் காண்பிக்கப்பட்ட சிங்களத் தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் ஒரு சிங்கள நடிகையின் கெளரவத்தை மாசுபடுத்தக்கூடிய சில காட்சிகள் காண்பிக்கப்பட்டன என்றும் இத்தகைய காட்சிகளை பெரியவர்களோ, சிறுவர்களோ பார்ப்பது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப் படுவதை தடைசெய்ய வேண்டும் என்றும் காமினி லொக்குகே கேட்டுக்கொண் டுள்ளார்.

இத்தகைய தரங் குறைந்த பாலியல் நிகழ்வுகளை இணைத்திருக்கும் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பதனால் தான் சிறுவர்களின் துஷ்பிரயோகம் நாட்டில் அதிகரித்து இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து பணம் சம்பாதிப்பதற்காக சில ஒழுக்க நெறிகளை மீறி படங் களையும் தொலைக்காட்சி நாடகங் களையும் தயாரிப்பது தவறு என்றும் கூறினார்.

நாட்டில் சுமார் 50 சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment