காத்தான்குடி சந்தித்த கறுப்பு ஜூலை .. (2)

சென்றவாரத் தொடர்….

-SHM

புலிகளின் கொள்ளையையடுத்து ஊரில் பஞ்சம் நிலவுகின்றது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படுகிறது. உணவுக்கு மக்கள் அலைந்து திரிந்தனர். குழந்தைகளுக்கான உணவுகள் இல்லாமையினால் தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் பசிதீர்க்க படாதபாடுபட்டனர். மருந்துப் பொருட்கள் இல்லாமையால் நோயாளிகள் மென்மேலும் பாதிக்கப்பட்டனர். 

போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன. வெளியூர்களில் வியாபாரம் செய்தவர்கள் ஊருக்குள் வர முடியாது. இதேபோல் ஊருக்குள் இருப்பவர்கள் வெளி ஊர்களுக்குச் சென்று பொருட்களை வாங்கிவருவதற்கு முடியாத சூழல். மக்களிடம் பணமில்லை. அப்போது குறிப்பிடத்தக்கவர்களே வெளிநாடுகளில் இருந்து வந்தனர். அவர்களின் பணம் வந்து சேர்வதற்கு- பல மாதங்கள் சென்றன. குறிப்பாக கிழக்கில் தபால் சேவை இயங்கவில்லை. தபால்கள் அனைத்தும் கொழும்பில் முடங்கிக்கிடந்தன.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியோர், குறிப்பிட்ட விடுமுறையில் நாடு திரும்பியோர் ஊருக்கு வந்த தங்களது உறவுகளைப் பார்க்கமுடியாமல் கொழும்பிலும், கதுறுவெலயிலும் நின்று மீண்டும் விமானம் ஏறிச்சென்றதும் கசப்பான உண்மை!

பசியின் கொடுமையால் குழந்தைகளையும் சிறுவர்களையும் மற்றும் மருந்தின்றி நோயாளிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. கல்முனை நகரை படையினர் புலிகளிடமிருந்து மீட்டதால் அம்பாறை மாவட்டம் படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்திருந்தது.

இதற்கிடையில் ஊரில் இருந்து ஹஜ் செய்வதற்கு பொலன்னறுவை பாதையூடாகச் சென்ற ஹஜ்குழுவின் வாகனங்கள் வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்குமிடையில் இருதரப்பு தாக்குதலுக்குள்ளும் அகப்பட்டது. செல்வீச்சுகளுக்கும் மோட்டார் குண்டுகளுக்குமிடையில் அகப்பட்ட வாகனங்கள் அல்லாஹ்வின் உதவியால் காப்பாற்றப்பட்டன. அதிர்ச்சியாலும் உலவியல் ரீதியிலும் சிலர் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் பின்னர் பாதுகாப்பாக அன்றுமாலை ஹஜ்சென்ற குழுவினர் ஊர் திரும்பி ஆண்கள் ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலிலும், பெண்கள் சித்தீக்கியா பெண்கள் அரபிக்கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டனர்.

காத்தான்குடி வரலாற்றில் முதன் முதலாக சுமார் 300 பேர் ஹஜ் நிறைவேற்றச் சென்றமை 1990ம் ஆண்டாகும். சமாதான சூழல், மூவினச் சமூகத்தின் நல்லுறவு, ரமழான் மற்றும் சிங்கள-தமிழ் சித்திரை புதுவருடம் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வந்ததனால் வியாபாரிகள் நன்மையடைந்திருந்தனர். அன்று ஹஜ் யாத்திரைக்குப் போகவிருந்த ஒவ்வொரு நபரிடமும் ரூ.1000 தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலும் புலிகள் கப்பம் பெற்றனர்.

இதன்பின்னர் கல்முனை பாதையூடாக ஹாஜிகள் சென்றனர். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரை இராணுவம் இன்று அல்லது நாளை கைப்பற்றலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஊர்மக்கள் இருந்தனர். ‘பெட்டரி’ மூலமாக எங்கேயாவது ஒலிக்கும் வானொலிப்பெட்டி அருகில் இலங்கைச் செய்திக்கும், பி.பி.சி தமிழோசை மற்றும் இந்திய வானொலிச் செய்திகளுக்குமாக மக்கள் குழுமி இருந்து நடப்பு விடயங்களை அறிந்து கொள்வர். இதைவிட எந்த தகவல் ஊடகமும் தொழிநுட்பமும் அன்று மக்களிடத்தில் இருக்கவில்லை!.

கல்முனை ஊடாக வாகனங்கள் போய்வருவதால், ஊரிலுள்ள வர்த்தகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தங்களது வாகனங்களை எடுத்துக்கொன்டு ஊருக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுவருவதற்காக செல்கின்றனர். இதே போல் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக வெளியூர்களில் இருந்து ஊருக்குள் வரமுடியாமல் வெளி இடங்களில் தங்கி இருந்த வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், நோயாளிகள், வெளிநாடுகளில் இருந்து நீண்ட விடுமுறையில் வந்தவர்கள் என்று பலர் கல்முனையை வந்தடைந்திருந்தனர். எனினும் கல்முனையில் இருந்து காத்தான்குடிக்கு வருவதற்கான வாகன வசதிகள் இருக்கவில்லை. மேலும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பு வரையுள்ள பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் தொடர்ந்தும் இருந்ததால், வாகன உரிமையாளர்கள் அல்லது சாரதிகள் பிரயாணம் செய்வதற்கு விரும்பவில்லை. எனவே வியாபாரத்துக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பும் வாகனங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர்.

கொழும்பிலிருந்தும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான காத்தான்குடி மக்கள் சாய்ந்தமருது பள்ளிவாயலிலும், கல்முனை பஸ்தரிப்பு நிலையத்திலும் காத்திருந்தனர். அன்று காலையில் இருந்து வாகனங்கள் சில கல்முனையை வந்தடைந்தன. அவை அனைத்தும் காத்தான்குடி வர்த்தகர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன.

வீதிகள் வெறிச்சோடி இருந்தன. காலை பத்து மணியிலிருந்து ஒரு சில வாகனங்கள் காத்தான்குடிக்கு செல்கின்றன. இதற்கிடையில் காத்தான்குடியில் இருந்தும் வாகனங்கள் வந்து சேர்ந்தன. இதனால் பிரச்சினைகள் ஒன்றும் இல்லை என்ற ஓர் எதிர்பார்ப்போடு காத்தான்குடியை நோக்கி வாகனங்கள் வருகின்றன.

காத்தான்குடியில் இருந்து சுமார் 5 மைல்களுக்கு அப்பால் இருக்கும் அம்பலாந்துறைச் சந்தியில் சில விடுதலைப்புலிகள் நிலை கொன்டிருந்தனர். காலையில் இருந்து மதியம் வரை சென்ற வாகனங்கள் பலவற்றை தந்திரோபாய ரீதியில் புலிகள் வழிமறிக்காது விட்டிருந்தனர். அதன்பின்னர் வந்த சகல வாகனங்களும் நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. வீதியோரத்தில் நின்ற புலிகள், காட்டுக்குள் இருந்த புலிகளிடம் சமிக்ஞை செய்து வினவுவர். அவர்களின் சமிக்ஞைக்கு ஏற்றாற்போல் வாகனங்கள் விடப்படும்! அல்லது கடத்தப்படும்!

சுமார் நண்பகல் பதினொரு மணியிலிருந்து பி.ப. 5 மணிவரை புலிகளின் தந்திரமான ஆட்கடத்தலும் பொருட்கடத்தலும் தொடர்ந்தன. வேலை வெட்டி இல்லாமல் எந்நேரமும் பிரதான வீதிச் சந்திகளில் குழுமி நிற்கும் மக்கள் வாகனங்கள் கல்முனை ஊடாக சென்றுவருவதாகவே நினைத்திருந்தனர். ஏனெனில் பெரும்பாலான மக்களின் தொழில் அன்றைய நாட்களில் முடக்கப்பட்டிருந்தன. இதனால் பெரும்பாலானவர்கள் வேலை இல்லாமலேயே காலத்தைக் கழித்தனர். பாடசாலைகளும் அன்று இயங்கவில்லை!

 ‘கல்முனையில் இருந்து வாகனங்கள் வருகுதாம்’ என்று வெளியூர்களில் இருந்து வரும் தனது சொந்தங்களைத் தேடி உறவினர்கள் காத்தான்குடி பிரதான வீதியில் குழுமத் தொடங்கினர். கல்மனையில் இருந்து வந்தவர்கள்

‘அவர் எங்களுக்கு முன்னர் வந்திட்டாரே’

என்று காத்திருக்கும் உறவினர்களிடம் ஒவ்வொரவராய்க் கூறிக்கொள்கின்றனர். ஊரில் இருப்பவர்கள்

‘இல்லலையே நாங்கள் பல மணிநேரமாக இங்கே தான் நிற்கின்றோம்’

என்று பதில் வரும்.

இப்படியே மாலை 6 மணிவரைக்கும் மக்கள் குழம்பிப்போய் இருந்தனர். புலிகள் ஆட்களைக் கடத்துகிறார்களா? எனும் சந்தேகம் ஆறுமணிவரை ஊர்மக்களுக்குத் தெரியவில்லை. அதன் பின்னர்தான் புலிகளின் மற்றுமொரு வேட்டை மக்களுக்கு புரிந்தது. ஒருவாகனத்தை விட்டுவிட்டு, மற்றைய வாகனத்தைக் கடத்தினர். இதனால் ஊர்மக்களுக்குச் சந்தேகம் வரவில்லை.

உள்ளுர்-வெளியூர் வியாபாரிகள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், வயோதிபர்கள், பெண்கள், சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் என்று அன்றைய நாளில் 70 பேர்களைக் கடத்திக் கொன்றனர். எனினும் சரியான கருத்துக்கணிப்பைப் பெறமுடியாதிருந்தது.  சில கணிப்பின்படி 107 என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.  பல நாட்கள் வெளிநாடுகளில் இருந்து அன்று ஊருக்கு வந்தவர்கள் பற்றி இதுவரையில் தகவல்கள் இல்லை.

லொறிகளிலும், வேன்களிலும் ஊருக்குக் கொண்டுவரப்பட்ட அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் என்று அனைத்தையும் புலிகள் அம்பலாந்துறைக்குக் கடத்திச் சென்றனர். கதறக் கதற வாகனங்களுடன் கடத்திச் சென்று, காட்டில் எமது சகோதரர்களைச் சுட்டுக் கொலை செய்து பெரும் புதைகுழிகளுக்குள் போட்டு மூடினர்.

இந்திய அமைதிகாக்கும் படைக்கு 3 வருடங்களாக கண்களில் மண்ணைத்தூவி பதுங்கி வாழ்ந்து வந்த புலிகளின் கிழக்குமாகாண கஞ்சிக்குடிச்சாறு முகாமை இலங்கை இராணுவத்தினர் முற்றுகையிட்டு கைப்பற்றி இருந்தனர். இத்தாக்குதலுக்கு மறைந்த இராணுவத் தளபதி ‘டென்சில் கொப்பேகொடுவ’ நியமிக்கப்பட்டிருந்தார். அம்பாறை முஸ்லீம்கள்தான் இந்தப் பதுங்கு முகாமை இராணுவத்துக்குக் காட்டிக் கொடுத்ததாகவும் அதன் பழிதீர்ப்பே இவ் ஆட்கடத்தல் சம்பவம் எனவும் புலிகள் அன்று தெரிவித்திருந்தனர்.

இத்தாக்குதலால் தப்பிப்பிழைத்து, மட்டு மாவட்டத்துக்குள் ஊடறுத்த புலி உறுப்பினர்களாலேயே இக்கடத்தல்  சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. எனினும் ரஞ்சன், கரிகாலன் போன்ற துவேசிகளின் வழிகாட்டலிலேயே இவ் ஆட்கடத்தலும் பொருட்கடத்தலும் இடம் பெற்றிருந்ததாக பின்னர் அறியக் கிடைத்தது.

ஆத்திரத்தாலும் கவலையாலும் பிரதான வீதி மக்களின் கண்ணீரால் நனைகிறது. யார் யார் கடத்தப்பட்டனர் என்று தகவல் சேகரிக்கப்படுகின்றன. மின்சாரம் இல்லாமையால் ‘ஜெனரேட்டர்’ மூலமாக கடத்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களது விபரங்களை ஊர் இளைஞர்கள் ஒன்று திரட்டி துண்டுப்பிரசுரமாக பிரதான வீதியில் ஒட்டி வந்தனர்.

என்ன நடக்கிறது என்பதை எங்களால் ஊகிக்க முடியாமல் இருந்தது. புலிகள் ஏன் இவ்வாறு அப்பாவி முஸ்லீம்களை வேட்டையாடுகின்றனர்? என்ன இலாபத்தை இதனால் அடைகின்றனர்? என்று மக்கள் ஆத்திரப்பட்டனர். சென்றவாரம் ஊர்ச் சொத்துக்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்ற புலிகள் மீண்டும் உயிர்கள் மேல் கைவைத்திருக்கின்றனர்.

அன்று மாலை ஊர் சோகத்தால் நனைகிறது. பள்ளிவாயல்கள் தோறும் மக்கள் ஒன்று சேர்ந்து கடத்தப்பட்டவர்கள் விபரங்கள் பற்றி பேசப்படுகின்றது. தப்பிய சிலர் , சம்பவத்தைக் கூறுகின்றனர். எங்களால் தாங்க முடியாமல் இருந்தது.
பாவம்! எப்படி அவர்களின் உயிர்கள் பிரிந்திருக்கும்! பெண்கள், சிறுவர்கள் ….. மிருகங்களைவிடக் கொடூரமாக இழுத்துச் சென்று ஒருவர் முன் ஒருவராக சுட்டுக் கொலை செய்ததாக அறிந்து… கண்ணீரால் உடல் நனையும் வரை அழுதோம்! தூக்கமின்றி எங்கள் உயிர்களும் உடல்களும் உயிரிழந்த சடலங்களாக இருந்தது போல் உணர்ந்தோம்!  பிரார்த்தித்தோம்!

இவர்கள்தானா வடகிழக்கை ஆளப்போகின்றவர்கள்?

என்று மக்கள் இறைவனிடம் ஓர் கேள்வி கேட்டனர்.

அந்தக் கேள்விக்கு பல விடைகளை இறைவன் இன்று கண்முன்னால் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

வாழ்க்கையில் சந்தித்திராத பல சோகங்களைத் சந்தித்த 1990 ஜூலை மாதம் காத்தான்குடி மக்கள் மறக்கவில்லை! பல உயிர்கள்! பல கோடி சொத்துக்கள் இழந்ததால் பைத்தியம் பிடித்தவர்கள்போல் கவலையால் பலர் அலைந்தனர். அழுதனர்!
இத்துடன் விட்டார்களா????

குறிப்பு:

புலிகளும் புலி சார்பு ஊடகங்களும் இரண்டு பிரதான விடயங்களை அன்று முதல் புலிகள் தோற்கடிக்கப்படுவரைக்கும் எழுதி வந்து, மக்களை மடையர்களாக்கி போரை ஊக்கிவித்து வந்தன.

1. கெரில்லா போரை வெற்றி கொள்ள முடியாது.

2. வல்லரசை ஒத்த  பிரமாண்ட இராணுவத்தைக் கொன்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரால்கூட வன்னிக் காட்டுக்குள் நுழைய முடியாமல் பின்வாங்கினர்.

ஆனால் சரித்திரம் மாறியது. அதுதான் உண்மையும்!

அல்ஹம்துலில்லாஹ்!

(முற்றும்)

Published by

Leave a comment