வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பம்!

கிழக்கு- சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நாளை ஆரம்பமாகின்றது. மூன்று மாகாணங்களிலுமுள்ள ஏழு மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறுமெனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்களை அமைதியான முறையில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை உறுதி செய்யும் வகையில் வேட்பு மனுத் தாக்கலின் பின் சர்வ கட்சி செயற்பாட்டுக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தவும் தேர்தல் செயலகம் உத்தேசித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளை 12ம் திகதி ஆரம்பித்து 19ம் திகதி நண்பகல் வரை இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை- அம்பாறை- மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளன.

இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 347099 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 441787 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 285 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளதுடன் 10 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 769813 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 623 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டு 24 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 27 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கேகாலை மாவட்டத்தில் 631981 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 464 வாக்களிப்பு நிலையுங்கள் அமைக்கப் பட்டு 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 17 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 245363 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 566 வாக்களிப்பு நிலையங்கள் அமைக் கப்பட்டு 18 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 21 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் 606507 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 608 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 21 உறுப் பினர்களைத் தெரிவு செய்வதற்காக 24 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வுள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தில் 294265 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 287 வாக்காளிப்பு நிலையங்களில் 10 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

ஒவ்வொரு மாகாணங்களிலும் வெற்றி பெறும் கட்சிகளுக்கு தலா இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.

-அரசாங்க தகவல் ஊடகம்

Published by

Leave a comment