சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து ஆட்களை கடத்துவதை தடுப்பதற்கான பாரிய நடவடிக்கையொன்றை பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்களைத் தேடி புலனாய்வுத்துறையினரும் பொலிஸாருடன் இணைந்து இராணுவம், கடற்படை, விமானப்படையினர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் இன்று வரை சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதற்காக கைது செய்யப் பட்டனர்.
இவர்களில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா அனுப்புவதற்கு முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 16 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முப்படையினர், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் தமது நடவடிக்கைகளை மூன்று பிரிவுகளாக முன்னெடுப்பதாக பிரிகேடியர் ருவன் வனிக சூரிய தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி பணம் சேகரிக்கும், மற்றும் பயண ஏற்பாடுகளை மேற் கொள்ளும் நபர்கள் மற்றும் இதற்கு துணை போகும் நபர்கள் தொடர்பாக நாட்டுக்குள் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ், இராணுவம் என்பன தமது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவற்றையும் மீறி அவுஸ்திரேலியா செல்வதற்காக கடற்கரையோரங்களுக்கு வரும் ஆட்களை கண்காணிக்கவும் வள்ளங்களை கண்காணிக்கவுமென நாட்டின் சகல கரையோர பகுதிகளிலும் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையும் மீறி கடலில் ஆழ்கடல் வள்ளங்களில் (டிலோர்கள்) அவுஸ்திரேலியா செல்லும் சட்டவிரோத செயற்பாட்டாளர்களை தேடி கைது செய்ய கடற்படையினரும் விமானப்படை யினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு நடவடிக்கையின் ஊடாகவே நேற்று இரண்டு ஆழ்கடல் வள்ளங்கள் திருமலைக்கு தென் கிழக்கே கைப்பற்றப்பட்டதாக பிரிகேடியர் ருவன் வனிக சூரிய தெரிவித்தார்.
2012 ம் ஆண்டில் இருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலரும் பல இலட்சங்கள் கொடுத்து ஆழ்கடல் வழியாக செல்வதற்கு முற்பட்டுள்ளனர். சிலர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணத்தை பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக வள்ளங்களில் ஏறி கடற்படையினரால் கைதான சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக அனுப்புவதாக கூறி பணம் சேகரிக்கும் நபர்கள், தரகர்கள், வள்ளங்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாக 011-2674505 அல்லது 011-2674506 அல்லது 011-2674503 என்ற தொலைபேசிகளினூடாக அறியத்தருமாறு இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிக சூரிய தெரிவித்தார்.
-தினகரன்
Leave a comment