காத்தான்குடி சந்தித்த கறுப்பு ஜூலை….

-SHM

இலங்கையில் முஸ்லீம் சமூகம் ஒன்று இருக்கின்றதா?  என்று உலகம் நினைத்தது 1990 பள்ளிவாயல் படுகொலைக்குப் பின்னரே! இலங்கையில் பௌத்தம், இந்து (சிங்கள-தமிழ்) இரு இனமுமே இருப்பதாகவும், பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினரான தமிழர்களுக்குமிடையே ஓர் இனப் போராட்டம் நடைபெறுவதாக உலகம் நம்பிக்கொன்டிருந்த காலம். அச்சு ஊடகங்களையும், வானொலி, தொலைக்காட்சி செய்திகளையும் தவிர, தகவல் தொழிநுட்பம் இணையத்தள வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தாத ஓர் காலம்.

இலங்கையில் தனது சிறுபான்மை இனத்துக்காக போராட வெளிக்கிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், தங்களைப் போலவே சிறுபான்மையாக இருந்த, தங்களைப் போலவே தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசிவந்த, நட்பாலும் உறவாலும் பிண்ணிப் பிணைந்திருந்த முஸ்லிம் சமூகம் மீது குறிப்பாக வட-கிழக்கு முஸ்லீம் அப்பாவி மக்கள் மீது தங்களது மிருக வேட்டையை மிலேச்சத்தனமாக வெளிப்படுத்திய காலம்.. அது 1990.

சுட்டெரிக்கும் ஓர் கோடைகாலம். வரட்சியால் புழுதி மணல்கள் கச்சான் காற்றுடன் கலந்து மக்களின் கண்களை இலக்கு வைத்து சென்றது. அராங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்டிருந்த இரண்டாவது சமாதான உடன்படிக்கை 1990 ஜூன் மாதம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தாக்குதலுடன் புலிகள் முறித்துக் கொண்டனர்.

1987 நவம்பரில் இருந்து 1990 மார்ச் மாதம் வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையினர் வெளியேறிய பின்னர், வடகிழக்கு புலிகளின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. மின்கம்பங்களும் இரயில் தண்டவாளங்களும் புலிகளால் அபகரிக்கப்பட்டன. வடகிழக்கு இருளில் சூழ்ந்திருந்தது.

விடுதலைப்புலிகளைத் தேடி அழித்து, அப்பகுதியில் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு இயல்பு வாழ்வை பெற்றுக்கொடுக்க வட கிழக்குக்கு இராணுவத்தினர் முன்னேறி வந்த நேரம்.

1990 சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து காத்தான்குடி பிரதான வீதியில் சில கடைகள் கட்டப்பட்டன. புதிய வர்த்தக நடவடிக்கைகளும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. வியாபாரங்கள் செழித்திருந்தன. மட்டக்களப்பு புகையிரத நிலையம் 1985 க்குப் பின்னர் வழமைக்குத் திரும்பி, இரயில் போக்குவரத்துக்கள் இரவு, பகல் என்று சேவைகள் இடம்பெற்று வந்தன. மற்றும் இரவுநேர வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெற்றவந்தன. இதனால் வர்த்தகங்களும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் நல்லதோர் நிலையில் முன்னேறி இருந்தன.

இதற்கிடையில் காத்தான்குடி வர்த்தகர்களிடமிருந்து மாதாந்த கப்பம் பெறப்பட்டு வந்தன. புலிகளின் பத்திரிகையாக வெளிவந்த’ ஈழநாதம்’ பலவந்தமாக ஒவ்வொரு கடைகளிலும் விற்கப்பட்டு வந்தன.

நாயின் நாக்கில் எச்சில் சுரப்பது போல் அன்றும் புலிகளின் நாக்கிலும் முஸ்லிம்கள் மீதான தாகம் சுரந்தது. வட கிழக்கின் சில பகுதிகளை முன்னேறி வந்த இராணுவத்தனர் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் புலிகளுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல் ஏற்பட்டது. உண்பதற்கு உணவு இல்லை. உடுப்பதற்கு உடை இல்லை! கழுகுப்பார்வையாக இருந்த காத்தான்குடியின் வர்த்தகம் 1990 ஜூலை மாதம் இரண்டாம் வாரம் இருள் சூழ்ந்த ஓர் இரவுப் பொழுதில் இலக்கு வைக்கப்படுகிறது.

சுமார் 1500 புலிகள் காத்தான்குடி பிரதான வீதியில் நிலை கொண்டிருந்தனர். அநேகமானோர் புலிச் சீருடை அணிந்திருந்தனர். இஷாத் தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் சென்றவர்கள் பலர் தடுக்கப்பட்டனர். சிலர் அனுமதிக்கப்பட்டனர். பிரதான வீதியை கடக்க தடை விதித்திருந்தனர். தொழுகையை முடித்தவர்கள் அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தொலைபேசி வளர்ச்சி அடைந்திருக்கவில்லை! தொலை பேசி இருந்தும் இயங்க வில்லை. புலிகள் காத்தான்குடி பிரதான வீதியில் சூழ்ந்திருப்பது ஊருக்குள் செய்தியாய் கசிந்தது. வதந்திகளும் பரவின. எனினும் என்ன நடைபெறப்  போகின்றது என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயுத பலத்துடன் நின்ற புலிகளை நோக்கி ‘ஏன் இன்று இவ்வாறு இங்கு நிலை கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்கவும் எங்களுக்கு முடியவில்லை!

இராணுவம் முன்னேறி வாழைச் சேனையில் நிலை கொண்டிருக்கின்றனர். இன்றோ நாளையோ மட்டக்களப்பைக் கைப்பற்றிவிடுவர். அதனால் புலிகள் இராணுவத்தைத் தாக்குவதற்கு தங்களது படைகளைக் குவித்திருக்கலாம் என்றே அநேகமானோர் கருதி இருந்தனர்.

ஆனால் …

நள்ளிரவு 12 மணி. காத்தான்குடியின் சொத்துக்களாய், மக்களின் பரம்பரை வர்த்தகமாய் திளைத்திருந்த காத்தான்குடி பிரதான வீதியின் கடைகள் உடைக்கப்படுகின்றன. படுவாங்கரையில் இருந்து மண்முணைத்துறை ஊடாக வந்திறங்கிய ஆயிரக்கணக்கான புலிகளும் அவர்களது நூற்றுக்கணக்கான வாகணங்களும் பிரதான வீதியில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்வதில் ஈடுபட்டன.

அப்போது சுமார் 250க்கும் குறைவான குறிப்பிடத்தக்க கடைகளைக் கொண்டிருந்த பிரதான வீதி, இரும்புச் சந்தங்களாலும் மட்டக்களப்பு-யாழ்ப்பாணத் தமிழாலும் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மருந்துப்  பொருட்கள் புடைவைகள், இரும்புக் கடைக்குரிய பொருட்கள், சில்லறைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மரத்தளபாடங்கள் மற்றும் பணம் அனைத்தும் மீதமில்லாமல் பாசிசப் புலிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன. சில இடங்களில் வெளிச்சத்திற்காக டயர்களை எரித்திவிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி 5, சந்தைத் தொகுதி, காத்தான்குடி 3, குட்வின் கடைத் தொகுதி, காத்தான்குடி 1 கபுறடி வீதிக்கடை மற்றும் உள்ளுர் சில கடைகள் என்று சுமார் 300 வியாபார நிலையங்களை புலிகள் சூரையாடி இருந்தனர். அப்போது அண்ணளவாக மதிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதி 5 கோடி!

அதிகாலை 4 மணிவரைக்கும் கட்சிதமாக புலிகள் காரியத்தை முடித்தனர். புலிகளின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் அப்போதைய நிலைமை இருந்ததால் புலிகளை எதிர்க்க அல்லது தடுக்க அன்று எங்களுக்கு இயலாமல் போய் இருந்தது. காத்தான்குடி மக்கள் படுக்கையைவிட்டு எழ முன்னர் காத்தான்குடி மக்களின் சொத்துக்கள் மட்டக்களப்பு வாவியைத் தாண்டிச் சென்றுகொன்டிருந்தன.

அதிகாலை சுப்ஹ் தொழுகைக்கு மக்கள் விரைகின்றனர். வாழ்க்கையில் சுப்ஹ் தொழாதவர்கள் கூட அன்று தொழுதார்கள். பள்ளிவாயல்கள் ஜூம்ஆ போன்று நிறைந்திருந்தது. இடம் இல்லாமல் பலர் வெளியில் தொழுதார்கள்!

விடிந்த அந்த நாள் பொழுது ஓர் சோகத்துடன் காத்தான்குடி மக்களை வரவேற்றது. சூரிய ஒளி பிரகாசிக்கவில்லை. வாழ்க்கையில் மறக்கமுடியாத என்றுமே கண்டிராத ஓர் அவல காட்சியை மக்கள் பார்த்து அழுதனர். தாய்மார்களும் பெண்களும் வாய்விட்டழுதனர். உண்மையில் ஓர் மிருகக் கூட்டத்தின் செயற்பாடு வெளிப்பட்டிருந்தது. சீனி, மாவு, சில்றைகள்  வீதிகளில் சிதறிக்கிடந்தன.

புலிகள் ‘ட்ரான்ஸ்போமர்’களை வெடிவைத்து தகர்த்தும், மின் கம்பங்களையும் மின் கம்பிகளையும் அபகரித்ததால் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் காரிருளில் முழ்கியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வட முனையிலும் தென்முனையிலும் புலிகளை விரட்டியடித்து தங்களது கட்டுப்பாட்டின்கீழ் இலங்கை இராணுவத்தினர் வைத்திருந்தனர். இதனால் மாவட்டத்தின் வடமுனையில் வாழைச்சேனைவரையிலும் தென்கிழக்கில் கல்முனைவரையிலும் படையினர் நிலைகொண்டிருந்தனர். இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழேதான் இருந்தது. அவற்றுள் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரு பிரதான முஸ்லீம் ஊர்களும் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டின்கீழ் இருந்தன.
(…தொடரும்)

Published by

Leave a comment