-MMS
விரைவில் நடைபெறவிருக்கும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சம்பந்தமாக திருகோணமலையில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு சந்திப்பு ஒன்றினை சம்பந்தன் நேற்று சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடத்தினார். இதில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்இ தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும். வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டிருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுமானால் இதனைக் கொண்டு சர்வதேச சமூகம் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற பாரிய பிரசாரத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறக்கூடாது. அரச கட்சியுடன் இணைந்து போட்டியிடும் எந்த தமிழரும் இத்தேர்தலில் வெற்றி பெறக் கூடாது. இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கக் கூடாது. அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் இத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம் என்று இங்கு உரையாற்றிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கருத்தக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment