விண்வெளி பயணத்தில் முதல் இலங்கை வீரர்

சீனாவுடன் இணைந்து ஒப்பந்தம் கைச்சாத்து

இன்னும் 4 ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு இலங்கையர் ஒருவரை அனுப்பி வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை நாம் ஏற்படுத்தவுள்ளோம்.

இலங்கையின் தனியார் நிறுவனமான சுப்ரிம் சட், சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பெரிய செய்மதிகளை தயாரிக்கும் கிரேட் வோல் கோப்பரேசன் நிறு வனத்துடன் இணைந்து ஒரு இலங்கை விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தமொன்றில் சமீபத்தில் சீனத் தலைநகரமான பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டது. சுப்ரிம் சட் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஆர்.எம். மணிவண்ணன், தமது நிறுவனம் எமது நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கக்கூடிய வகையில் ஒரு செய்மதியை சொந்தமாக வாங்கக்கூடிய தகுதியை அடைந்திருப்பதாக சொன்னார். உலகிலுள்ள 44 நாடுகளுக்கே சொந்தமாக செய்மதிகள் இருக்கின்றன. 

சில நடுகள் மற்ற இரண்டு மூன்று நாடுகளுடன் இணைந்தே செய்மதிகளை சொந்தமாக வைத்திருப்பதாக அவர் சொன்னார்.

ஏற்கனவே தமது நிறுவனம் சீன நிறுவனத்துடன் இணைந்து ஒரு செய்மதியை கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைத்ததாகவும், அடுத்த நடவடிக்கையாக தாம் இலங்கைக்கு சொந்தமான ஒரு செய்மதியை சீனாவின் கிரேட் வோல் அனுசரணையுடன் தயாரிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு முழுமையாக சொந்தமாக இருக்கும் இந்த செய்மதி தயாரிப்பு பணிகள் இன்னும் இரண்டு ஆண்டில் தயாராகிவிடும் என்றும், இதற்கென தாங்கள் மொத்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்திருப்பதாக அவர் சொன்னார்.

1957ம் ஆண்டிலேயே உலகின் முதலாவது செய்மதி தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஸ்புட்நிக் என்று பெயரிடப்பட்டது. இன்று விண்வெளியில் 900இற்கும் அதிகமான செய்மதிகள் பூமியை வளம் வந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் 381 செய்மதிகள் எந்நேரமும் ஒரே ஸ்தானத்திலேயே நிலை கொண்டிருக்கின்றன. ஒரு செய்மதி 15 வருட ஆயுளைக் கொண்டுள்ளது. தமது நிறுவனம் அடுத்த நடவடிக்கையாக இலங்கையின் இளைஞர் ஒருவருக்கு விண்வெளி தெழில்நுட்பத்துறைக்கு சீனாவில் பயிற்சியளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறதென்றும், இதையடுத்து விரைவில் விண்வெளி வீரர்களாக பயிற்சி பெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரவிருப்பதாகவும் மணிவண்னன் தெரிவித்தார்.

இவர்களுக்கு சீனாவில் பயிற்சி அளிக்கப்படும். மூன்று, நான்கு வருடங்களில் எமது இளைஞர்களில் ஒருவருக்கு விண்வெளிக்கு விஜயம் செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பு கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

-தினகரன்

Published by

Leave a comment