மட்டு பெரியபோரதீவில் பொலிசார் தாக்கப்பட்டனர்

-MMS

இலங்கையில் கிறீஸ் மனிதப்பதட்டம் ஏற்பட்டு ஒருவருடகாலமான நிலையில் தற்பொழுது அது ஓய்ந்திருக்கின்றது. இந்நடவடிக்கையில் பொலிசாரும் இராணுவத்தினரும் பொதுமக்களால் வெளிப்படையாக சந்தேகிக்கப்பட்டிருந்ததும் ஞாபகமிருக்கலாம்.

களுவாஞ்சிக்குடி  பெரியபோரதீவுப் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீது தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேரியபோரதீவு – பழுகாமம் வீதியில்  ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சிவிலுடையில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக சென்றவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சிவிலுடையில் வந்து இவர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் தவறான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்களுக்கு பல்வேறு தடவைகள் எச்சரிக்கை விடுத்த நிலையில் சில இளைஞர்கள் அவர்களின் நடவடிக்கையினை பொறுக்க முடியாமல் தாக்குதல் நடத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பொலிசாரும் அரசாங்கமுமே பதில் தரவேண்டும்!

Published by

Leave a comment