கிழக்கில் சுழன்ற சுழல்காற்று! மக்கள் பதட்டம்!!

-MMS

நேற்று திங்கட்கிழமை கிழக்கில் திடீரென எற்பட்ட புயல்காற்றால் மக்கள் பெரிதும் பதட்டமடைந்தனர். சிறுவர்களையும் குழந்தைகளையும் இழுத்துச் செல்லுமளவுக்கு இச்சுழற்காற்று வீசியது. மட்டக்களப்பில்  நேற்று பிற்பகல் வீசிய சுழல் காற்றினால் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கலந்து கொண்டு ரையாற்றிய மேடை சரிந்து விழுந்ததுடன் மேடை முற்றாக சேதமடைந்தது.

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய மருத்துவ விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேடையில் மாலை 3.40 மணியளவில் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

அந்த சமயம் பலத்த சுழல் காற்று வேகமாக வீச ஆரம்பித்தவுடன் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவால் தொடர்ந்து பேசமுடியாமல் போனது. பதட்டநிலையும் தோன்றியது. வீசிய பலத்த காற்று காரணமாக நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த மேடை முற்றாக சேதமடைந்ததுடன் பார்வையாளர்கள் இருந்த பகுதியும் சேதமடைந்தன.

அதனைத் தொடர்ந்து உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டன.

இதேவேளை வீசிய கடும் காற்று காரணமாக வாகரையின் மீள்குடியேற்ற பிரதேசங்களில் சில வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வாழைச்சேனை, ஓட்டமாவடியில் கிராண், செங்கலடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகரை, மாங்கேணி பகுதியில் உள்ள பாடசாலையின் கூரைகள் கடும் காற்றினால் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு நகரின் திருமலை வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு மேல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் உடைந்ததனால் வாகன போக்குவரத்துக்கள் வேறு வீதி வழிகளில் மேற்கொள்ளப்பட்டன.

Published by

Leave a comment